(க-து.) கற்றறிந்தார் வெகுளாதொழியவே எல்லாத் தீமைகளும் தாமேஅழிந்தொழிதல் உறுதியாம். (வி-ம்.) ஏனையோர்க்காயின் பகைவரை வெல்லும்பொருட்டுத் தம்மை வலியுடையராக்குதல் வேண்டும். கற்றறிந்தோர்க்கு அங்ஙனந் தம்மை வலியுடைய ராக்குதல் வேண்டுவதில்லை. தமக்கு அப்பகையாகிய இனத்தை வெல்லவே ஏனைப் புறப்பகைகள் யாவும் அழியும் என்பதாம். ஆகவே, சினத்தை அடக்குதலே பகைவரை வெல்லுதலும் தம்மைக் காத்தலும் ஆம். இது பற்றியே திருவள்ளுவரும் 'தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க'என்றார். 'நெல்செய்யப் புல்தேய்ந்தாற்போல நெடும்பகை தன்செய்யத் தானே கெடும்' என்பது பழமொழி. (3) 54. எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப் பட்டவர் வைதாராக் கொண்டு விடுவர்மன் அஃதால் புனற்பொய்கை ஊர! விளக்(கு) எலிகொண்டு தனக்குநோய் செய்து விடல். (சொ-ள்.) புனல் பொய்கை ஊர - நீர் நிறைந்த பொய்கை சூழ்ந்த மருதநிலத் தலைவனே!, எய்தா நகை சொல் எடுத்து உரைக்கப்பட்டவர் - பொருந்தாத இகழ்தற்குரிய சொற்களைப் பிறரால் எடுத்து உரைக்கப்பட்டவர், வைதாராக் கொண்டு விடுவர் - அவர் தம்மை இகழ்ந்ததாகக் கொள்வர் அறிவிலார், அஃது - அங்ஙனம் இகழ்ந்ததாகக் கொள்ளுதல், விளக்கு எலி கொண்டு தனக்கு நோய் செய்து விடல் - விளக்கினை எலி இழுத்துச் சென்று (தம்மைப் பிறருக்கு விளக்கிக் காட்டுதலால்)தனக்குத் துன்பத்தினைச் செய்துகொள்ளுதலை ஒக்கும். (க-து.) அறிவிலார் துன்பத்தைத் தாமே தேடிக் கொள்வர். (வி-ம்.) எலி விளக்கினைக் கொண்டு தன்னை விளக்குதலால் துன்பத்தைத் தானே தேடிக்கொள்ளுகின்றது. அறிவிலாரும் தம் பழியைக் கூறாதிருக்கவும் பிறர்பழியைத் தம்மேலிட்டுத் தமக்குள்ள பழியை வெளிப்படுத்திஅதனால் துன்பத்தினை அடைவர். தம்மிடம் இகழ்தற்குரிய செயல்கள்உண்மையின், இகழ்வார் இகழ்வன யாவும் தம்மைக்குறித்ததே யென நினைப்பர் அறிவிலார். 'விளக்கு எலி கொண்டு தனக்கு நோய் செய்துவிடல்' என்பது பழமொழி. (4)
|