பக்கம் எண் :

39

55. தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க - பரி(வு)இல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
அம்பலம் தாழ்க்கூட்டு வார்.

(சொ-ள்.) தெரியாதவர் தம் திறனில் சொல் கேட்டால் - அறிவில்லாருடைய (அவர் தம்மை இகழ்ந்து கூறும்) திறமையில்லாச் சொற்களைக் கேட்டால், பரியாதார் போல இருக்க - துன்புறாதவர்களைப்போல் பொறுத்திருக்க, பரிவு இல்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே - (அங்ஙனமன்றி) அன்பில்லாத அயலார் வாயை அடக்கப் புகுவார்களோ? இல்லை, (புகுவரேல்) அம்பலம் தாழ்க் கூட்டுவார் - பொது இடத்தைத் தாழ்இடுவாரோடு ஒப்பார்.

(க-து.) அறிவில்லாருடைய வாயை அடக்குதல் முடியாது.

(வி-ம்.) அறியார் தமது அறிவின்மையைப் புலப்படுத்துகின்றார் என்றறிவதல்லது அவர் கூறும் சொற்களுக்காக வருந்துதல் கூடாது. பொது இடத்தினைத் தாழிட இயலாதவாறுபோல, அவர் வாயைஅவித்தல் இயலாதுபோம்.

'அம்பலம் தாழ்க் கூட்டுவார்' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(5)

56. கையார உண்டமையால் காய்வார் பொருட்டாகப்
பொய்யாகத் தம்மைப் பொருளல்லார் கூறுபவேல்
மையார உண்டகண் மாணிழாய்! என்பரிவ
செய்யாத எய்தா வெனில்.

(சொ-ள்.) மைஆர உண்ட கண் மாண் இழாய் - மையினை மிகுதியும் உண்ட கண்களையும் மாட்சிமைப்பட்ட கலன்களையும் உடையாய்!, கை ஆர உண்டமையால் - (தம் பகைவர் கொடுத்த பொருளை) கைநிறைய வாரி வாரி உண்டமையால், காய்வார் பொருட்டாக - (அவர் கூறியதைச் செய்யாதவழி) சினப்பர் என்பது காரணமாக, பொருளல்லார் - மனிதனாகவன்றி ஒரு பொருளாகவும் கருதப்படாத அற்பர்கள், தம்மை பொய்யாகக் கூறுபவேல் - தம்மீது உண்மை இல்லாத சில பழிச் சொற்களைக் கூறினரேல், செய்யாத எய்தா எனில் - தாம் செய்யாத பழிச் சொற்கள் தம்மை வந்து அடையாவாகலான், என் பரிவ - எது கருதி வருந்துவது? (வருந்துதல் வேண்டா).