சோர்வின்றி - மனத்தளர்வின்றி, கல்தொறும் கல்லாதேன் என்று - கற்குந்தோறும் நான் கல்லாதவன் என்று கருதி, வழியிரங்கி - கல்லா தொழிந்த நாட்களுக்கு வருந்தி, உற்று ஒன்று சிந்தித்து - மனம் பொருந்தி ஒருமைப்பட மீண்டும் மீண்டும் நினைத்து; உழன்று ஒன்று அறியுமேல் - வருந்தி அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின், கல்தொறும் - பின்னும் நூல்களைக் கற்குந்தோறும், தான் கல்லாதவாறு - தான்கல்லாதவனாகவே நினைத்துக் கற்கக் கடவன். (க-து.) படிக்குந்தோறும் அறியாதவனாகநினைத்து ஒவ்வொருவனும் படிக்கவேண்டும். (வி-ம்.) வழியிரங்குதல் - ஓர் இன்பத்தை அடையும் பொழுது அங்ஙனம் அடையாது நின்ற நாளுக்கு வருந்துதல், சோம்பலின்றி அறியாதவனாக மதித்து ஆராயவே இந்த அறிவு தோன்றும். அது தோன்றுமாதலால் மேலும் மேலும் கற்றலான ஊக்கம் பிறக்கும். அதனான் மிகுந்த இன்பம் பெறலாம். சிறந்த பொருள்களை அறியும் அருமை நோக்கியே ஆசிரியர் 'உற்று ஒன்று சிந்தித்து உழன்று ஒன்று அறியுமேல்' என அறியும் அருமைப்பாடு விளக்கினார். (2) 3. விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத் துளக்கம்இன்(று) என்றனைத்தும் தூக்கி விளக்கு மருள்படுவ தாயின் மலைநாட என்னை பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள். (சொ-ள்.) மலைநாட - மலைநாட்டையுடையவனே, விளக்கு - விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை, விலைகொடுத்துக் கோடல் - விலைப்பணம் கொடுத்துக் கொள்வது, விளக்கு துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி - விளக்கினால் பொருள் வேறுபாடு இல்லை என்று விளக்கின் தன்மை முழுமையும் ஆராய்ந்தேயாகும், விளக்கு மருள்படுவதாயின் - விளக்கு தெளிவாகக் காட்டாது தானே மழுங்குதலைச் செய்யின், என்னை - பொருள்கொடுத்துப் பெற்ற அதனால் அவர்க்கு வரும் பயன் யாது? (ஆதலால்), பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள் - பொருளைக்கொடுத்து இருளைக் கொள்ளார். (க-து.) ஞான நூல்களைக் கற்றல் வேண்டும். (வி-ம்.) விளக்கு - உண்மை நிலையை விளக்கிக் காட்டுதலின் இப்பெயர் பெற்றது. துளக்கம் - அசைவு; அஃதாவது பொருள் நிலை வேறுபாடு.
|