(க-து.) தம் பகைவர் முயற்சியால் அறிவிலார் பழி கூறினரேல் அதற்காக வருந்தவேண்டுவதில்லை. (வி-ம்.) பகைவருடைய தூண்டுதலாற் கூறுதலால் அதற்கு வருந்த வேண்டுவதில்லை. பகைவருடைய சொற்களைக் கேட்கும் பேதையர் தாம் உண்டது நினைந்து நன்றி அறிதலுடையவராய்ச் சோற்றுக்கடன் கழிக்கின்றார்கள் என்பது கருதி, அவர்கொண்ட நன்றியறிவுக்கு மனம் மகிழ்தலல்லது வருந்தலாகாது, 'செய்யாத எய்தா' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி. (6) 57. ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக் காய்ந்(து) எதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? - தீந்தேன் முசுக்குத்தி நக்கும் மலைநாட! தம்மைப் பசுக்குத்தின் குத்துவார் இல். (சொ-ள்.) தீம் தேன் முசு குத்தி நக்கும் மலைநாட! - இனிய தேன் கூட்டை ஆண்குரங்கு கிழித்து (ஒழுகும் தேனை) நக்குகின்ற மலைநாடனே!, பசு குத்தின் குத்துவார் இல் - பசு தம்மை முட்டினால் (சினந்து தாமும்) முட்டுவார் இல்லை, (ஆதலால்) ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்கு - ஆராய்ந்த அறிவினை உடையரல்லாதவர்கள் சொல்லும் பொருளற்ற சொற்களுக்கு, கற்றறிந்தார் காய்ந்து எதிர்சொல்லுபவோ - நூல்களைக் கற்று ஆராய்ந்து அறிந்தவர்கள் சினந்து எதிராகப் பொருளற்ற சொற்களைக் கூறுவரோ?கூறார். (க-து.) ஆராய்ச்சியில்லாதவர்கள்கூறும் அற்பச் சொற்களைப் பொருளாகக்கொண்டு கற்றறிந்தார்சினவார். (வி-ம்.) ஆராய்ச்சி இன்மையால் கூறுகின்றார்கள் என்றறிவதல்லது இயல்பாகக் கூறுகின்றார்களென்றறிதல் கூடாது. ‘நாய் கவ்வின் மாறாகக் கவ்வினார் இல்லை' என்று அறிவு ஆராய்ச்சியில்லார்களுக்கு உவமை கூறினாற் போலாது, 'பசுக் குத்தின்' என்றமையால் நூல்களைக் கற்றவர்; ஆனால் ஆராய்ச்சியில்லார் என்று கொள்ளல் வேண்டும். பிழை செய்யினும் அவர் பிழையன்று என்று கருதுதல் வேண்டும். 'பசுக்குத்தின் குத்துவார் இல்' இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி. (7) 58. நோவ உரைத்தாரைத் தாம்பொறுக்க லாகாதார் நாவின் ஒருவரை வைதால் வயவுரை பூவின் பொலிந்தகன்ற கண்ணாய்! அதுஅன்றோ தீஇல்லை ஊட்டும் திறம்.
|