(சொ-ள்.) பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய் - பூப்போல விளங்குகின்ற விசாலமான கண்ணையுடையாய்!, நோவ உரைத்தாரை தாம் பொறுக்க லாகாதார் - மனம் வருந்துமாறு அடாத சொற்களைச் சொல்லியவர்களை அவர் கூறிய சொற்களைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாதவர்கள், நாவின் ஒருவரை வயவுரை வைதால் - தமது நாவினைக் கொண்டு தம்மை வைதாரைத் தாம் இகழ்ந்து கூறினால், (அங்ஙனம் இகழ்ந்து கூறுதல்) தீ இல்லை ஊட்டும் திறம் அது அன்றோ - தீயினால் வீட்டினைக்கொளுத்தும் திறம்போல் அது ஆகும்அல்லவா? (க-து.) தம்மை இகழ்ந்தாரைத் தாமும்இகழ்தல் தமக்குத் துன்பத்தை விளைவித்துக்கொள்வதாக முடியும். (வி-ம்.) இயல்பாகவே பிறரை இகழும் குணமுடையாரைத் தாம் சினந்துகூறி அதனால் அவர்க்குச் சினமூட்டுதல், எரியும் தன்மையை உடைய கூரை வீட்டில் தீ வைத்ததை ஒக்கும். தாம் சினந்து கூறியது பற்றுக்கோடாகக் கொண்டு தீங்கு விளைக்க முற்படுவர். 'தீ இல்லை ஊட்டும் திறம்' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி. (8) 59. கறுத்(து) ஆற்றித்தம்மைக் கடியசெய் தாரைப் பொறுத்(து)ஆற்றிச் சேறல்புகழால் - ஒறுத்(து) ஆற்றின் வான்ஓங்கு மால்வரை வெற்ப! பயன்இன்றே தான்நோன் றிடவரும் சால்பு. (சொ-ள்.) வான் ஓங்கும் மால் வரை வெற்ப - வானளவு உயர்ந்த பெரிய மலைகளை உடைய வெற்பனே!, தான் நோன்றிட வரும் சால்பு - ஒருவன் பொறுக்கும் பொறையினால் வருவது அவனது குணம், (ஆகையால்) கறுத்து ஆற்றி தம்மை கடிய செய்தாரை - சினத்தின்கண் மிக்குத் தமக்குத் தீய செயல்களைச் செய்தாரை, பொறுத்து ஆற்றி சேறல் புகழால் - அவர் தீச் செயல்களைப் பொறுத்து அவர்க்கு நன்மை செய்து ஒழுகுதல் புகழாகும், ஒறுத்து ஆற்றின் பயன் இன்று - கோபித்துத் தாமும் தீயசெய்கைகளைச் செய்தால் அதனால் புகழ்உண்டாதல் இல்லை. (க-து.) தீங்கு செய்தார்க்கு நன்மைசெய்தல் வேண்டும். (வி-ம்.) 'பயன் இன்று' என்றது கோபித்துத் தீயசெயல்களைச் செய்தலால் வென்றோம் என நினைத்தல், அப்பொழுதைக்கு இன்பமாகத் தோன்றினும் எஞ்ஞான்றும் நிற்பதாய புகழ் இல்லை என்பதைக் கருதியேயாம்.
|