பக்கம் எண் :

43

அறிவிற் சிறியார் தாமாக முன்னின்று மாறுபட்டு வன்மை செய்து நிற்றல், சாம் மா - சாதற்குரிய விலங்குகள், போம் ஆறு அறியா - செல்லும் வழியினை அறியாதவாறு, புலன் மயங்கி - அறிவு மயங்கலால், ஊர் புக்கு கண் காணாதவாறு - ஊரினுள் புகுந்துகண்களை இழந்து வருந்தியதை ஒக்கும்.

(க-து.) பெரியாரோடு மாறுபடுவார்இறுதியை எய்துவர்.

(வி-ம்.) இவர்க்கு எம்மோடு மாறுபடுந் தகுதி இல்லை என்று கருதிய உரமே, தாமாகவே பெரியோர்களுக்கு முன்னிற்குமாறு செய்தது. சாதற்குரிய விலங்குகள் அறிவு மயங்கி ஊரினுள் புகுதல்போல இறத்தற்குரிய மக்கள் அறிவுடையாரோடு மாறுபடப் புகுவர் என்பதாம். தாமாக என்பது தாமா என ஈறுகெட்டு நின்றது.

'போமா றறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாதவாறு' என்பது பழமொழி.

(2)

62. எல்லாத் திறத்தும்இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின்
நிறைந்தார் வளையினாய்! அஃதால் எருக்கு
மறைந்துயானை பாய்ச்சி விடல்.

(சொ-ள்.) நிறைந்து ஆர் வளையினாய் - அழகு நிறைந்து பொருந்தியிருக்கின்ற வளையையுடையாய்! எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரை - எல்லா வகையானும் உயர்ந்த அறிஞர்களை கல்லா துணையார் - கல்லாமையைத் துணையாக உடைய அறிவிலார், தாம் கைப்பித்தல் சொல்லின் - தாம் அதனுள் மறைந்து நின்று வெறுக்கப் பண்ணுதலைச் சொல்லின், எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல் - எருக்கம்புதரின்கண் மறைந்து ஒருவன் யானையின்மேல் அம்பு எய்தலோ டொக்கும்.

(க-து.) அறிவுடையாரைக் கல்லார் துன்புறுத்துவாராயின்,அவர் கெட்டொழிதல் உறுதி என்றறிதல் வேண்டும்.

(வி-ம்.) எல்லாத்திறம் என்றது அறிவு, திரு,ஆற்றல் முதலியன.

எருக்கம் புதரின்கண் மறைந்துநின்றெய்தானொருவன் கெடுதல் திண்ணம் ஆமாறுபோல, கல்லாமையின்கண் மறைந்து நின்று பெரியோரைவெறுக்கப் பண்ணினவனும் இறத்தல் திண்ணமாம்.

'எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடும்' என்பது பழமொழி.

(3)