பக்கம் எண் :

44

63. முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? - இன்னிசை
யாழின்வண்(டு) ஆர்க்கும் புனலூர! ஈனுமோ
வாழை இருகால் குலை.

(சொ-ள்.) இன் இசை யாழின் வண்டார்க்கும் புனலூர - இனிய ஓசையையுடைய யாழைப்போல வண்டுகள் ஒலிக்கும் புனல் நிறைந்த மருதநிலத் தலைவனே! வாழை இருகால் குலை ஈனுமோ - வாழை இருமுறை குலைகளை ஈனுமோ (ஈனாது.) (அதுபோல்) முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும் - முன்பு ஒருமுறை பிழை செய்தவனைப் பொறுத்தவர்களா யிருக்கவும், பின்னும் பிழைப்ப பொறுப்பவோ - பின்னரும் குற்றம் செய்தால் பொறுப்பார்களோ? (பொறுக்கமாட்டார்கள்.)

(க-து.) சான்றோர் அறிவிலார் செய்த குற்றத்தை ஒருமுறையன்றிப் பொறுக்கமாட்டார்கள்.

(வி-ம்.) அறிவிலார் மீண்டும் மீண்டும் தீங்கு செய்தவராய்த் திரிவாரானால், அவர்க்கு மிக்க துன்பம் வரும் என்பது கருதி, அவரை நன்னெறியில் நிறுத்தற்பொருட்டு இரண்டாவதுமுறை தீங்கு செய்யின், அதற்குத் தக்க தண்டனையை யளிக்கப் பெரியோர் முற்படுவர். ஆதலாற்றான் 'பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ'என்றார்.

'ஈனுமோ வாழை இருகால் குலை' என்பது பழமொழி.

(4)

64. நெடுங்காலம் வந்தார்நெறியின்மை கண்டு
நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்
அடும்(பு)ஆர் அணிகானற் சேர்ப்ப! கெடுமே
கொடும்பா(டு) உடையான் குடி.

(சொ-ள்.) அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப - அடும்பின் மென்கொடிகள் நிறைந்து அழகு செய்கின்ற சோலைகள் சூழ்ந்த கடல் நாடனே!, நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு - நீண்ட காலமாகத் தீச்செயல் கைவந்தார் செய்த தீங்கினைக் கண்டு, பெரியர் நடுங்கி பெரிதும் நலிவர் - அறிஞர் (இவர் இத்துணைக் காலமாகச் செய்த தீங்கினால் உலகு என்னாயிற்றோ) என்று மனம் நடுக்கமுற்றுப் பெரிதும் வருந்துவார்கள், (அவர் அங்ஙனம் நினைத்த அளவில்) கொடும்பாடு உடையான் குடிகெடும் - கொடிய தன்மையை உடையானது குடி கெட்டுப் போகும்.