பக்கம் எண் :

45

(க-து.) அறிவுடையார் அஃதிலார் செய்த இன்னல்களை நினைத்து வருந்துவாராயின், நினைத்த அளவிலே அவர் குடிகெட்டொழியு மென்பதாம்.

(வி-ம்.) 'குடி கெடும்' என்றதனால் செய்தஅவனேயன்றி அவன் வழியினுள்ளாரும் கெட்டொழிவார்என்பது பெறப்படும்.

'குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு, நின்றன்னார் மாய்வர் நிலத்து' என்பது இக்கருத்துப்பற்றி எழுந்த திருக்குறள். 'கொடும்பாடு உடையான் குடி கெடும்' என்பது பழமொழி.

(5)

9.புகழ்தலின்கூறுபாடு

65. செய்த கருமம் சிறிதானும் கைகூடா
மெய்யா உணரவுந் தாம்படார் - எய்த
நலத்தகத் தம்மைப் புகழ்தல் புலத்தகத்துப்
புள்அரைக்கால் விற்பேம் எனல்.

(சொ-ள்.) செய்த கருமம் சிறிதானும் கைகூடா - செய்த செயலின் பயன் சிறிதளவும் கைவருதல் இல்லை, மெய்யா உணரவும் தாம்படார் - செயலின் பயனை உறுதியாகப் பெறுவார் என்று பிறரால் எண்ணவும் படாதவர்கள், எய்த நலத்தக தம்மைப் புகழ்தல் - நிரம்ப நன்மையிலே பொருந்தத் தம்மைத் தாமே புகழ்தல், புலத்து அகத்து புள் அரைக்கால் விற்பேம் எனல் - வயலின்கண் இருக்கும் புள்ளினை அரைக்கால் பொன்னுக்கு விற்பேம் என்று கூறுதலோ டொக்கும்.

(க-து.) முடிக்கமுடியாத செயலை முடிப்பதாகக்கூறிப் புகழ்தல் கூடாது.

(வி-ம்.) கைவரப் பெறாத புள்ளை அரைக்கால் பொன்னுக்கு விற்பேம் என்று கூறுதல்போல், ஒரு சிறிதும் பயனை அடையாதும்' அடையலாம் என்பதில்லாமலுமிருந்தும் பயன் முழுதும் பெறுவதாகக் கூறுதல் வெறும் புகழ்ச்சி உரைஎன்று கருதப்படும்.

'புலத்தகத்துப் புள் அரைக்கால் விற்பேம் எனல்'என்பது பழமொழி.

(1)