66. தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில் அமரா ததனை அகற்றலே வேண்டும் அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம். (சொ-ள்.) அமை அரும் வெற்ப - மூங்கில்கள் நிறைந்த மலை நாடனே!, கொள்ளாக் கலம் தமவேனும் - தமக்குத் தகாத பொற்கலன்கள் தம்முடையதாயினும், தம்மை அணியார் - அவற்றைக்கொண்டு தம்மை அணிபெறச் செய்யார் மக்கள், (அதுபோல) தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில் - தம்மைப் புகழ்ந்து கூறுமிடத்து, தமரேயும் அமராததனை அகற்றலே வேண்டும் - சுற்றத்தாரேயானாலும் தமக்குப் பொருந்தாதனவற்றைக் கூறுவரேல் அவற்றை அவர் சொல்லாதவாறு நீக்குதலையே ஒருவன் விரும்புதல்வேண்டும். (க-து.) தமக்குப் பொருந்தாத புகழ்ச்சி உரையைஏற்றல் கூடாது. (வி-ம்.) தமக்குத் தகாதன பொற்கலனே யாயினும் ஏற்றுக் கொள்ளாதவாறு போல, பொருந்தாதன கூறுவார் தமரேயாயினும் கூறாதவாறு விலக்குதல் வேண்டும் 'தமரேயும்' என்றதனால் அயலார் கூறும் பொருந்தாதனவற்றையும் விலக்கவேண்டும் என்பது ஏற்படும். 'அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி. (2) 67. தாயானும் தந்தையா லானும் மிக(வு)இன்றி வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல் நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல். (சொ-ள்.) தாயானும் தந்தையாலானும் மிகவு இன்றிவாயின் மீக்கூறும் அவர்களை - பெற்ற தாயாலேயாயினும் (அன்றித்) தந்தையாலேயாயினும் மிகுத்துக் கூறப்படுதல் இல்லாது தாமே தம் வாயால் உயர்த்திக் கூறிக்கொள்பவர்களை, ஏத்துதல் - பிறர் புகழ்ந்து கூறுதல், நோய் இன்று எனினும் - துன்பம் இல்லையாயினும், அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல் - அடுப்பின் பக்கலில் முடங்கியிருக்கும் நாயைப் புலி யென்று கூறுதலோ டொக்கும். (க-து.) தற்புகழ்ச்சி உடையாரைப் புகழ்தல் கூடாது.
|