(வி-ம்.) தம் மக்கள் செய்த தீச்செயல்களை மறைத்து உயர்வாகக் கூறும் இயல்புடையார் தம் தாய் தந்தையராகலான், 'தாயானும் தந்தையாலானும்' எனக் கூறப்பட்டது. அவர்களிடமும் உயர்வு பெறார் எனவே, கொடியர் என்பது பெறப்படும். அறிவிலார் இல்லாதன கூறிப் புகழ்ந்துகொள்ளலின் அவரைப் புகழ்வதற்கு அவர்க்குள்ளனவற்றை வருந்தி ஆராய்ந்து கூறுதல் வேண்டா; இல்லாதன கூறினும் ஏற்றுக்கொள்வர் என்பார், 'ஏத்துதல் நோயின்று' என்றார். நாய் என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 'அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்' என்பது பழமொழி. (3) 68. பல்கிளையுள் பார்த்துறான் ஆகிய ஒருவனை நல்குரவால் வேறாக நன்குணரான் - சொல்லின் உரையுள் வளவியசொல் சொல்லா அதுபோல் நிரையுள்ளே இன்னா வரைவு. (சொ-ள்.) பல் கிளையுள் பார்த்துறான் ஆகி - நெருங்கிய பல சுற்றத்தார் நடுவே ஆராய்ந்தறிதல் இல்லாதவனாகி, ஒருவனை நல்குரவால் வேறாக நன்கு உணரான் சொல்லின் - தமது கிளையுள் ஒருவனை அவனது வறுமை காரணமாக வேறுபட நினைந்து நன்றாக ஆராய்தலில்லாதவனாக ஒன்றைக் கூறின், உரையுள் வளவிய சொல் சொல்லாததுபோல் - சொற்களுள் நல்ல சொற்களைச் சொல்லாதவனாக ஆதல்போல, நிரையுள்ளே இன்னாவரைவு - பத்தியாய்க் குழுமியிருந்த கூட்டத்தில் ஒருவனை வரைந்து சிறப்புச் செய்தலும் இன்னாது. (க-து.) கூட்டத்தில் ஒருவனை இழித்துப் பேசுதலும் ஒருவனை உயர்த்திப் பேசுதலும்தீதாம். (வி-ம்.) கூட்டத்துள் ஒருவனை வறுமை காரணமாக இழித்துக் கூறுதலும் ஆகாது; ஒருவனை உயர்த்திக் கூறிச் சிறப்புச் செய்தலும் ஆகாது. பொருள் இரண்டனுள் ஒன்று உவமையாகவும் மற்றொன்று பொருளாகவும்நின்றன. 'நிறையுள்ளே இன்னா வரைவு' என்பது பழமொழி. (4) 10. சான்றோரியல்பு 69. நீ(று)ஆர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல் வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித் தாறாப் படினும் தலைமகன் தன்னொளி நூறா யிரவர்க்கு நேர்.
|