பக்கம் எண் :

48

(சொ-ள்.) வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகி - சிறப்புப்படத் தோன்றும் ஒளியை யுடைத்தாய், நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல் - நீரிலே படிந்தாலும் ஒட்டாத ஒப்பற்ற இரத்தினத்தைப்போல், தாறாப்படினும் - தாற்றப்பட்டதாயினும், தலைமகன்தன் னொளி - தலைமகனுடைய பெருமை, நூறு ஆயிரவர்க்கு நேர் - நூறுஆயிரவர்கட்கு ஒப்பாகும்.

(க-து.) அறிவுடையார் பெருமை மறைக்கமறைபடாது.

(வி-ம்.) ஒளியாவது தா னுளனாகிய காலத்து மிக்குத் தோன்றுத லுடைமை. புடைத்து ஆற்றிக் கழித்த பிறகும் அவர் பெருமை நூறுஆயிரவர் ஒளிக்குச் சமமாகும்.

'தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர்' என்பது பழமொழி.

(1)

70. ஒற்கந்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால்
தன்மேல் நலியும் பசிபெரி(து) ஆயினும்
புன்மேயா தாகும் புலி.

(சொ-ள்.) வற்பத்தால் - பஞ்சத்தால், புலி - புலியானது, தன்மேல் நலியும் பசி பெரிது ஆயினும் - தன்னிடத்து வருத்தும் பசி மிக்கு வருந்தியதானாலும், புல் மேயாது ஆகும் - புல்லினை மேயா தொழியும், (அதுபோல) உயர்ந்தவர் - அறிஞர்கள் ஒற்கம் தாம் உற்ற இடத்தும் - வறுமையைத் தாம் அடைந்த இடத்தும், நின்ற நிலையின்மேல் நிற்ப - தாம் முன்பு இருந்த நிலையிலேயே நிற்பார்கள்.

(க-து.) பெரியோர் வறியராயினும்தம் நிலையினின்றும் திறம்பார்.

(வி-ம்.) 'இன்மை யென ஒரு பாவி மறுமையும், இம்மையுமின்றிவரும்' என்பதால் வறுமையின் ஆற்றல் பெறப்படுதலின், வறுமையுற்ற இடத்தும் தம் நிலையில் நிற்பார்கள் எனவே, வறுமையினது ஆற்றலும், அதை வெல்லும் அறிவுடையார்களது ஆற்றலும், பெறப்படும். அறிவுடையோர் தம் நிலையினின்றும் தாழ்ந்தவிடத்து மிக இழிவாகக் கருதப்படுவராதலின், 'நின்ற நிலையின்மேல் நிற்ப' என்றார். நிலையாவது தாம் கொண்டொழுகும்ஒழுக்கம்.

'பசி பெரிது ஆயினும் புல் மேயாதாகும் புலி' என்பது பழமொழி.

(2)