'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே' என்ற புறநானூற் றடிகளும் ‘ஆசிரியனை வழிபட்டுப் பொருள் கொடுத்துக் கற்றல் நன்று' என்பதை வலியுறுத்துகின்றன. குறித்தபொருள் மறைந்து நிற்க வேறுபொருள் கூறப்பட்டமையின் இச் செய்யுள் ஒட்டு அணியைச் சேர்ந்ததாகும். விளக்கு என்றமையால் பிறப்பின் தன்மையை விளக்கக் கூடிய ஞான நூல் குறித்த பொருளாகக் கொள்ளப்பட்டது. 'பொருளைக் கொடுத்து இருளைக் கொள்ளார்' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி. (3) 4. ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். (சொ-ள்.) ஆற்றவும் கற்றார் அறிவுடையார் - மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார், அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுக ளில்லை, அந்நாடு வேற்று நாடாகா - அந்த நாடுகள் அயல் நாடுக ளாகா, தமவேயாம் - அவ்வறிவுடையோர் நாடுகளேயாம், ஆயினால் - அங்ஙனமானால், ஆற்று உணா வேண்டுவது இல் - வழியில் உண்பதற்கு உணவு (கட்டமுது) கொண்டுசெல்ல வேண்டியதில்லை. (க-து.) கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம்சிறப்பு. (வி-ம்.) 'அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்' ஆதலான் செல்லுகின்ற இடந்தோறும் ஆண்டுள்ளோர்களால் வரவேற்கப்பட்டு வேண்டிய நலனை வேண்டியாங்கு எய்துவாராதலின், வழியிடையமுது வேண்டுவதில்லை யென்றார். கற்கலான நூல்களை மிகுதியாகக் கற்றவர்களையே அறிவுடையா ரென்றார். (4) 5. உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும் கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக் கற்றலிற் கேட்டலே நன்று.
|