நல்லர்' என்று கூறப்பட்டது. 'மாண்மிக' என்பதும் 'மாண்மிக்க'என்பதும் பாடம். 'கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்' என்பது பழமொழி. (5) 74. முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின் நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப! அறிமடமும் சான்றோர்க்(கு) அணி. (சொ-ள்.) நெறி மடல் பூந்தாழை நீடு நீர் சேர்ப்ப - செறிந்த மடல்களையுடைய அழகிய தாழைகள் பொருந்திய கடல் நாடனே!, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை யளித்தாரை கேட்டறிதும் - காட்டிற் படர்ந்திருந்த முல்லைக் கொடிக்குத் தேரையும், வாடையால் வாடி நின்ற மயிலுக்குத் தனது போர்வையையும் முன்னாளில் கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக அறிந்தோம். சொல்லின் - ஆராய்ந்து சொல்லுமிடத்து, அறிமடமும் சான்றோர்க்கு அணி - அறிமடமும் சான்றோர்க்குஅழகேயாம். (க-து.) அறிந்தும் அறியாது போன்று செயல்களைச் செய்தல் சான்றோர்க்கு அழகினைத் தருவதாம். (வி-ம்.) அறிமடம் - அறிந்தும் அறியாது போன்று இருத்தல். முல்லைக்குத் தேரீந்தான் பாரி. மயிலுக்குப் போர்வையீந்தான் பேகன். இவர்கள் காட்டிற் படர்ந்த முல்லைக்கும், வாடையால் மெலிந்த மயிலுக்கும் வேறு பொருள்களைக்கொண்டு அவைகளின் இடரை நீக்க அறிவாராயினும், அறியாதவர்கள் போன்று உயர்வுடைய தம் பொருள்களைக் கொடுத்துச் சேறலின் அறிமடமாயிற்று. அறியாதவர்கள் போன்று கொடுத்துச் சேறலின் அவர்கள் செயல்களால் புகழ் என்றும் நிலைபெற்று நிற்றலால், சான்றோர்க்கு அணி எனப்பட்டது. நீடுநீர் - மிக்கநீரையுடைமையின் கடலுக்காயிற்று. 'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்பது பழமொழி. (6) 75. 1பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர் சொல்லார் ஒருவரையும் உள்ளூன்றப் - பல்லா நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும் உரைத்தால் உரைபெறுதல் உண்டு.
1 மூன்றாம் அடி 'யானும்' என்றிருப்பின் தளை வழு நீங்கும்.
|