தனியிடத்தே பிடித்த குற்றத்தை நினைந்து குறைத்தான் என்று பழைய பொழிப்புரை கூறும். அதற்குச் சான்று ஒன்றுமில்லை. 'தீமை செய்தாய்போல் செங்கை குறைத்தாய்' என்ற ஒன்றே தீமை செய்திலன்என்பதற்குப் போதிய சான்றாம். 'காணார் எனச் செய்யார் மாணா வினை' என்பது பழமொழி. (8) 77. தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க் காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை - ஏய்ப்பார்முன் சொல்லோ(டு) ஒருப்படார் சோர்வின்றி மாறுபவே வில்லோடு காக்கையே போன்று. (சொ-ள்.) தீபால் வினையினை தீரவும் அஞ்சாராய் - கொடிய செயல்களின்பாற்பட்ட வினைகளுக்கு மிகவும் அஞ்சாதவர்களாய், காப்பாரே போன்று உரைத்த - தம்மைக் காப்பாற்றுகின்றவர்களைப்போல் கூறிய, பொய் குறளை ஏய்ப்பார்முன் - பொய்யாலும் குறளையாலும் தம்மை ஏமாற்றுகின்றவர்கள் முன்பு, சொல்லோடு ஒருப்படார் - அவர் கூறிய இனிய சொற்களுக்கு இணங்காதவர்களாய், வில்லோடு காக்கையே போன்று - வில்லைவிட்டு நீங்கும் காக்கையைப்போல, சோர்வு இன்றி மாறுப - தளர்ச்சியின்றி விட்டுநீங்குவார்கள். (க-து.) தீயார் சொற்களைக் கேட்டவுடனேயேஅவர்களைவிட்டு நீங்குவர் நல்லோர். (வி-ம்.) குறளை என்பது கோட்சொல். வில் என்றது சிறுவர்கள் மண் உருண்டைகொண்டு எய்யும் வில். ஒருமுறை அதன் கொடுமை யறிந்தவுடன் காக்கை பறந்துபோதல்போல், அறிவிலார் சொற்களைக் கேட்டதும் உடனே விட்டுநீங்குவர் அறிவுடையோர். 'வில்லோடு காக்கையே போன்று' என்பது பழமொழி. (9) 78. மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர் தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை மடலொடு புட்கலாம் மால்கடல் சேர்ப்ப! கடலொடு காட்(டு) ஒட்டல் இல். (சொ-ள்.) குடம்பை மடலொடு புள்கலாம் மால்கடல் சேர்ப்ப - கூடு பொருந்திய மடல்களோடு பறவைகள் விரவா நின்ற பெரிய கடலையுடைய நெய்தல்நிலத் தலைவனே!, கடலோடு
|