பக்கம் எண் :

55

(சொ-ள்.) கன்றி முதிர்ந்த கழிய பன்னாள் செயினும் - வெகுண்டு அளவுகடந்த தீயசெயல்களை மிகப்பல நாட்கள் செய்தாராயினும், ஒன்றும் சிறியார்கண் என்றானும் தோன்றாதாம் - அவற்றுள் ஒரு குற்றமும் சிறியாரிடத்து எப்பொழுதாயினும் தோன்றுதல் இல்லை, உயர்ந்தார் படும் குற்றம் ஒன்றாய்விடினும் - உயர்ந்தோரிடத்துளதாகிய குற்றம் ஒன்றாக இருப்பினும், குன்றின்மேல் இட்ட விளக்கு - மலையின்மீது வைத்த விளக்கினைப்போல் என்றும் விளங்கித்தோன்றும்.

(க-து.) பெரியோர்கள் செய்த குற்றம் நன்றாக விளங்கித்தோன்றும்.

(வி-ம்.) உயர்ந்தார் இயல்பாகவே தீங்கு செய்தல் இலர் என்பார், 'உயர்ந்தார்ப் படுங் குற்றம்' என்றார். தன்மேல் உள்ள விளக்கைப் பலருக்கும் காட்டுதல் குன்றேயாதல்போல, பெரியோர்களிடத்துள்ள தீமையை விளக்கிக் காட்டுவது அவர்களது நற்குணமே யாகும். சிறியார் நன்மை செய்யாராதலின் அவர் தீமை தெரிய வரா தென்பதாம்; அவர் என்றும் நன்மை செய்தல் இலராகலின், அவர் தீமை என்றும் தோன்றுதல் இல்லை. தீயார் தீமை தோன்றுதல்கூட இல்லை. பெரியார் தீமை விளங்கித் தோன்றும். 'என்றானும் தோன்றாதாம்' என்றமையால் எப்பொழுதும் விளங்கித்தோன்றும் என்பது கொள்ளப்படும்.

'குடிப்பிறந்தார் கண்விளங்கும்குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து'என்பது இக்கருத்துப்பற்றி எழுந்தது.

'குன்றின்மேல் இட்ட விளக்கு' என்பது பழமொழி.

(12)

11.சான்றோர் செய்கை

81. ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புர(வு)
ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்.

(சொ-ள்.) ஏற்றுக் கன்று - நல்ல எருதிற்குப் பிறந்த ஆண் கன்று, ஆற்றவும் போற்றப்படாதாகி - மிகவும் பாதுகாக்கப்படாததாய், புல்லின்றி மேயினும் - பசும் புற்கள் இன்றி யாதானும் ஒன்றை மேய்ந்தாலும், ஏறு ஆய்விடும் - பின்னர் எருதாக ஆகிவிடும்; (அதுபோல) மனை பிறந்த சான்றவன் - நல்ல குடியின்கட் பிறந்த அறிவுடையோன், ஈட்டிய ஒண்பொருள் இன்று எனினும் - தான் தேடிய மிக்க செல்வம் இல்லையாயினும், ஒப்பரவு ஆற்றும் - உலக நடையினை அறிந்து செய்யவல்லனாம்.