(க-து.) நற்குடிப் பிறந்தார் செல்வம் சுருங்கியகாலத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார். (வி-ம்.) ஒப்புரவு - உலக நடையினை அறிந்து செய்தல். ஏற்றுக் கன்று புல்லின்றி இருப்பினும் ஏறாய் விடுதல்போல, பொருள்இன்று எனினும் குடிப்பிறந்தார் குடிக்குரியதாகிய ஒப்புரவுசெய்யாதிரார் என்பதாம். 'ஈட்டிய ஒண்பொருள்' என்றமையால் தான் தேடிய பொருளைக் கொண்டே ஒப்புரவு செய்தல் வேண்டும் என்பது பெறப்படும். பிறர் ஈட்டிய பொருளைக்கொண்டு செய்யின், நன்மை அவர் மேலும் தீமை தன்மேலும் நிற்குமாதலின், தான் தேடிய பொருளைக் கொண்டேசெய்யவேண்டும். 'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு'என்பதும் இக்கருத்துப் பற்றியதே. 'புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன்று ஏறாய்விடும்' என்பது பழமொழி. (1) 82. அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும் இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர் மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன். (சொ-ள்.) மடம் கொண்ட சாயல் மயிலன்னாய் - மடமாகிய குணத்தைக்கொண்ட சாயலில் மயில்போன்ற பெண்ணே!, சான்றோர் கடம் கொண்டும் செய்வார் கடன் - அறிவுசான்றவர்கள் வேறொருவரிடத்தில் கடன் பெற்றாயினும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வார்கள்; (ஆகையால்), அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும் - தொடர்ந்து வறுமையுடையராய் வருதலின் ஒப்புரவு செய்யமுடியாத இடத்தும், இடம் கண்டு அறிவாம் என்றெண்ணி இரார் -ஒப்புரவு செய்யும் காலம் வந்தால் அப்பொழுது செய்வோம்என்று நினையார். (க-து.) சான்றோர் கடன்பெற்றாயினும் ஒப்புரவு செய்வார்கள்.
|