பக்கம் எண் :

58

(சொ-ள்.) பூண் தாங்கு இளமுலை பொற்றொடி - ஆபரணத்தைத் தாங்குகின்ற இளமையான தனங்களையும், பொன்னாலாகிய தொடியையும் உடையாய்!, பூண்ட பறை அறையார் போயினார் இல் - தம்மிடத்துள்ள பறையை அடிக்காது சென்றார் ஒருவரும் இலர்; (ஆகையால்), ஆண்டு ஈண்டு என ஒன்றோ - அங்கே குற்றம் செய்தார்; இங்கே குற்றம் செய்தார் எனக் கூறுதல் ஒரு காரணமாகுமோ?, அடைந்தாரை வேண்டா - தம்மிடத்து நட்பாக அடைந்தவர்களை அங்ஙனங் கூறுதல் வேண்டா, மாண்டிலார் என்றே மறைப்பக் கிடந்ததோ - மாட்சிமை உடையாரல்லர் என்று நட்பை விடுத்தற்குக் கிடந்ததொரு நீதி உண்டோ?(பொறுத்து நட்பாகவே கொண்டு வேண்டுவன செய்க.)

(க-து.) நட்டார் செய்த குற்றங்கருதி அவரை நீக்குதல் கூடாது.

(வி-ம்.) பறை பூண்டோர் தங்கடமையென அறிந்து அறைந்து சேறல்போல, தம்மை அடைந்தாரைக்காப்பாற்றுதல் தங்கடனென அறிந்து காப்பாற்றுதல்வேண்டும்.

பூண்டபறை யறையார்போயினார் இல் என்பது பழமொழி.

(4)

85. பரியப் படுபவர் பண்பிலா ரேனும்
திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
பாரெறியும் முந்நீர்த் துறைவ! கடனன்றோ
ஊர்அறிய நட்டார்க்(கு) உணா.

(சொ-ள்.) விரிதிரை பார் எறியும் முந்நீர் துறைவ - அகன்ற அலைகள் பாரில்வீசும் கடற்றுறைவனே!, பரியப்படுபவர் பண்பிலாரேனும் - தம்மால் அன்பு செய்யப்படுபவர்கள் சிறந்த குணங்கள் உடையரல்லரேனும், சான்றோர் திரியப் பெறுபவோ - அறிவுடையோர் நன்மை செய்தலினின்றும் திரிவார்களோ (இல்லை) (ஆதலால்,) ஊர் அறிய நட்டார்க்கு உணாகடனன்றோ - ஊரிலுள்ளோர் அறியத் தம்மோடு நட்புப் பூண்டவர்களுக்கு உணவுகொடுத்தல் கடமையல்லவா?

(க-து.) நட்டார் குணமிலாராயினும் சான்றோர்அவர்க்கு நன்மையே செய்வர்.

(வி-ம்.) மூன்று நீர்மையுடையது கடலாகலின், அதற்கு முந்நீர் எனப் பெயராயிற்று. அவை : ஆக்கல், அளித்தல், அழித்தல். ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று பகுதிப்பட்ட நீரை உடைமையின் முந்நீர் எனப் பெயராயிற்று என்றும் கூறுவர்.