பக்கம் எண் :

6

(சொ-ள்.) உணற்கு இனிய இன்னீர் - குடித்தற்கு இனிய உவர்ப்பில்லாத நன்னீர், பிறிது உழி இல் என்னும் - வேறு இடங்களில் இல்லையென்று நினைக்கும், கிணற்று அகத்துத் தேரை போல் - கிணற்றினுள்ளே வாழும் தவளையைப்போல், ஆகார் - தாமுங் கருதாமல், கணக்கினை - நூல்களை, முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலின் - நாள் முழுமையும் வெறுப்பின்றி இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும், கேட்டலே நன்று - (அறிஞர்களிடம்) விரும்பிக் கேட்டலே நன்று. (கற்றலிற் கேட்டலே இனிது.)

(வி-ம்.) தேரைபோ லாதலாவது தாம் விரும்பிச் செய்யும் கற்றதனாலன்றிக் கேட்டறிதலினாற் பயனில்லை என்று கருதுதல். தாம் பல நாளுங் கற்றறிந்ததில் தளர்வு வந்துழி, அறிஞர்வாய்க்கேட்ட கேள்வி ஊன்றுகோல் போல உதவுமாதலின், கேட்டலே நன்று என்றார். வருந்திக் கற்றலினும் கேட்டல் மிக இனிது என்பார், 'முற்றப் பகலும் முனியாது இனிதோதிக் கற்றலின்' என்று கற்றலின் அருமையை விளக்கினார். கணக்கு - வரையறை. மக்கள் நடத்தவேண்டிய வாழ்க்கையை வரையறை செய்தலின் நூல்கள் கணக்கு என்ற பெயரைப் பெற்றன. கணக்கினை அறிந்தோர் கணக்காயர் எனப்படுவார்.

(5)

6. உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

(சொ-ள்.) உரைமுடிவு காணான் - வழக்கினது முடிவான உண்மையை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன், இளமையோன் - சிறுவயதினன், என்ற - என்றிகழ்ந்த, நரை முதுமக்கள் உவப்ப - நரைமயிருள்ள முதியோர் இருவரும் மகிழும்படி, நரை முடித்து - நரைமயிரை முடியின்கண் முடித்து வந்து, சொல்லால் முறைசெய்தான் சோழன் - (அவர்கள் கூறிய) சொற்களைக் கொண்டே நீதி கூறினான் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன், குலவிச்சை கல்லாமல் பாகம் படும் - தத்தம் குலத்திற்குரிய அறிவு அந்நூல்களைக் கல்லாமலே இனிதுஅமையும்.

(க-து.) குலவித்தை கல்லாமலே அமையும்.

(வி-ம்.) உரை - சொல். இருதிறத்தாரும் உரைத்தலின் உரை, வழக்கு எனப்பட்டது. குற்றமுடையாராய்த் தண்டிக்கப்பட்டோரும், அரசன் வழக்கினை ஆராய்ந்து நீதி கூறி அறிவு