பக்கம் எண் :

60

குடிப்பிறப்பினால் இழிந்தவர்களைச் சார்பாகப் பெற்று, எமக்கு ஈது இறப்ப இழிவரவு என்று எண்ணார் - எமக்கு இங்ஙனம் வாழ்தல் மிகவும் இழிவைத்தரும் என்று நினையாராய், தால அடைக்கலமே போன்று வாழ்ப - ஒருவரிடம் வைக்கப்பெற்ற நிலமாகிய அடைக்கலப் பொருளைப்போல் பெருமையின்றி வாழ்வார்கள்.

(க-து.) உயர்குடிப் பிறந்தோர் சில காரணங்களைமுன்னிட்டு : இழிந்த குடியில் பிறந்தாரது சார்பு பெற்று ஒளியின்றி வாழ்வார்கள்.

(வி-ம்.) உடையானிடத்தில் வளம்பெற்றிருந்த நிலம் வேறொருவனிடம் வைக்கப்பட்ட இடத்து அஃதின்றி இருத்தல்போல, உயர்குடிப் பிறந்தோர் பெருமை இழந்து வாழ்வார்கள். சிறந்த நலன்களைக் கருதி அவரிடம் வாழ்தலின் இழிவாகக் கருதார்.

'தால அடைக்கலமே போன்று' என்பது பழமொழி.

(7)

88. பெரிய குடிப்பிறந் தாரும் தமக்குச்
சிறியார் இனமாய் ஒழுகுதல் - எறியிலை
வேலொடு நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ
பூவொடு நாரியைக்கு மாறு.

(சொ-ள்.) எறிஇலை வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய் - ஒளி வீசுகின்ற இலைவடிவாகச் செய்யப்பட்ட வேலொடு நேராக ஒத்த கண்ணையுடையாய்!, பெரிய குடிப்பிறந்தாரும் - உயர்ந்த குடியிற் பிறந்தவர்களும், தமக்குச் சிறியார் இனமாய் ஒழுகுதல் - கீழ்மக்களைத் தமக்கு இனமாகக் கொண்டொழுகுதல், அஃது - அச்செய்கை, பூவொடு நார் இயைக்கும் ஆறு அன்றோ - பூவோடு நாரைச் சேர்க்கும்நெறியல்லவா?

(க-து.) பெரியார் சிறியாரோடு ஒழுகுதல் பூமாலையைப் போல் அழகினைத் தருவதாம்.

(வி-ம்.) பூவினால் நாரும் மணம் பெறுதல்போல, பெரியோரால் சிறியோரும் நற்குணம் பெறுவர். சிறியார் இனமாய்.ஒழுகுதல் அவர்களை நன்னெறியில் நிறுத்தற்பொருட்டேயாகும்.

'பூவொடு நார் இயைக்குமாறு' என்பது பழமொழி.

(8)