89. சிறியவர் எய்திய செல்வ`த்தின் நாணப் பெரியவர் நல்குரவு நன்றே - தெரியின் மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின் முதுநெய்தீ(து) ஆகலோ இல். (சொ-ள்.) மது மயங்கு பூ கோதை மாணிழாய் - தேன் மிகுந்த அழகிய மாலையையும் மாட்சிமைப்பட்ட கலன்களையுமுடையாய்!, தெரியின் - ஆராய்ந்தால், மோரின் முதுநெய் தீது ஆகலோ இல் - புதிய மோரினைவிடப் பழைய நெய் தீது ஆவதில்லை. (நன்மையே பயக்கும்), சிறியவர் எய்திய செல்வத்தின் - அறிவிற் சிறியார் பெற்ற செல்வத்தைவிட, பெரியவர் நல்குரவு மாண நன்றே - அறிவுடையோர் எய்திய வறுமை மாட்சிமைப்பட நல்லதே யாகும். (க-து.) அறிவிலார் பெற்ற செல்வத்தைவிட அறிவுடையோர் பெற்ற வறுமையேமிகச் சிறந்தது. (வி-ம்.) மோர் புதிதாயினும் நெய் பழையதாயினும் மோரைவிட நெய்யில் மிக்க பயனுண்டு. அதுபோல, சிறியவர் எய்தியது செல்வமேயாயினும், பெரியவர் எய்தியது நல்குரவேயாயினும், அவர் செல்வத்தைவிட இவர் வறுமையே மிக நல்லது. சிறியார் செல்வம் தன்னையும் பிறரையும் கெடுத்தலானும், பெரியார் வறுமை அவையின்றி நிற்றலானும், அவர் செல்வத்தினும் இவர் நல்குரவு சிறந்ததெனப்பட்டது. மாறாக மேல் செல்வம், நல்குரவு என்றலின், முதுநெய் என்றதற்குப் புதிய மோர் கொள்ளப்பட்டது. 'மோரின் முதுநெய் தீது ஆகலோ இல்' என்பது பழமொழி. (9) 12.கீழ்மக்கள்இயல்பு 90. மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும் உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க இனநலம் நன்குடைய வாயினும் என்றும் மனநலம் ஆகாவாம் கீழ். (சொ-ள்.) மிக்கு பெருகு மிகு புனல் பாய்ந்தாலும் - மிகப் பெருகி நன்மை மிகுதலான நன்னீர் கடலில் வீழ்ந்தாலும், உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல்போல் - தன்னிடத்துள்ள உவர்ப்பு நீங்காத ஆரவாரிக்கும் கடலைப்போல், கீழ் - கீழ்மக்கள், மிக்க
|