இனநலம் நன்கு உடைய ஆயினும் - மிகவும் நல்லோரினத்தோடு சேர்ந்து வாழும் நன்மையை நன்றாகப் பெற்றிருந்தாலும், என்றும் மனநலம் ஆகாவாம் -எப்பொழுதும் மனத்தின்கண் தூய்மை பெறுதல் இலர். (க-து.) கீழ்மக்கள் பெரியார் இணக்கம்பெற்றிருப்பினும் மனச்செம்மை அடையார். (வி-ம்.) கடல் தன்னிடத்து வந்த நன்னீரை உவர்ப்பாக்குதல்போல், கீழ்மக்கள் தம்முடன் இருக்கும் பெரியோர்களைத் தம்மைப்போல் ஆக்குவர். 'ஒலிகடல்' என்றமையால் நல்லோரது இணக்கம் பெற்ற நாம் அவர்வழி ஒழுகாது நம் வழியில் அவரை ஒழுகச்செய்தோம் என்ற மகிழ்ச்சியால் ஆரவாரிப்பார் என்பது பெறப்படும்.'உப்புக்கடல்' என்றதற்கேற்ப 'மிகுபுனல்' நன்மை மிகுதலான நன்னீர் என்று கொள்ளப்பட்டது. 'இனநலம் நன்குடையவாயினும் என்றும்மனநலம் ஆகாவாம் கீழ்' என்பது பழமொழி. (1) 91. தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார் மிக்காரால் என்று சிறியாரைத் தாம்தேறார் கொக்கார் வளவய லூர! தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல். (சொ-ள்.) கொக்குஆர் வளவயல் ஊர - மீன் உண்ணும் கொக்குகள் நிறைந்திருக்கின்ற நீர்வளம் பெற்ற வயல்களை உடைய மருதநிலத் தலைவனே!, அக்காரம் சேர்ந்த மணல் - சர்க்கரையோடு கலந்திருக்கின்ற மணலை, தினலாமோ - சர்க்கரையென்று கருதி உண்ணலாமோ; (அதுபோல்), தக்காரோடு ஒன்றி தமராய் ஒழுகினார் - தகுதி உடையாரோடு பொருந்தி அவர் உறவினரைப்போல் நெருங்கி ஒழுகினார், (ஆதலால்), மிக்கார் என்று - குணத்தினால் மிக்கவர் என்று, சிறியாரை - அறிவிற் சிறியாரை, தாம் தேறார் - பெரியோர்கள் தெரிந்து நட்புக் கொள்ளார். (க-து.) சிறியார் பெரியாரோடு இணங்கியிருப்பினும்அவரோ டிணங்கார் அறிவுடையோர். (வி-ம்.) 'வளவயல்' நீர்வளம் பொருந்தியதாகலின் அதற்கேற்பக் கொக்கு என்பதற்கு மீனுண்ணும் கொக்கு என்று கொள்ளப்பட்டது. சர்க்கரையோடு சேர்ந்த மணலைச் சர்க்கரை என்று கருதி உட்கொள்ளாதவாறுபோல அறிவுடையோர்
|