வயது முதிர்ந்தாலும், நன்கு அறியார் தாமும் நனி உளர் - நல்ல நூல்களை அறியாதவர்கள் தாம் மிகுதியும் உளர், பாத்தி விதைத்தாலும் நாறாத வித்து உள - எருவிட்டு வரம்பு கட்டப்பட்ட பாத்தியில் விதையினை விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உள. (அவைபோல), பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது -அறிவில்லாதவனுக்கு அறிவுரைகளை உரைப்பினும் உண்மை உணர்வு அவனுக்குத் தோன்றாது. (க-து.) பேதைக்கு அறிவு ஊட்டுதல்இயலாது. (வி-ம்.) பூத்தால் காய்க்கும் மரம் உள. மூத்தால் நன்கறிவார் உளர். விதைத்தால் முளைக்கும் விதை யுள.உரைத்தால் உணர்வுபெறும் பேதையர் உளர். 'பேதைக்கு உரைத்தாலும் தோன்றா துணர்வு' என்பது பழமொழி. (4) 94. ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க - மூர்க்கன்றான் கொண்டதே கொண்டு விடானாகும் ஆகாதே உண்டது நீலம் பிறிது. (சொ-ள்.) ஓர்த்த கருத்தும் - ஆராய்ந்துவைத்த கருத்தும், உணர்வும் - உண்மையை அறியும் அறிவும், உணராத மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க - அறியாத மூர்க்கர்களுக்கு ஒரு பொருளையும் சொல்லாதொழிக. நீலம் உண்டது பிறிது ஆகாது - நீல நிறத்தை உண்டபொருள் வேறொரு நிறத்தைக் காட்டுதல் முடியாது. (அதுபோல), மூர்க்கன் தான்கொண்டதே கொண்டு விடான் ஆகும் - மூர்க்கன் தான் மேற்கொண்டதனையே மனத்தின்கண் கொண்டு விடான். (க-து.) மூர்க்கர்கள் பிறர்கூறுவனவற்றைக் கேட்டுத்திருந்தார். (வி-ம்.) ஆராய்ந்த கருத்தும் ஆராயும் அறிவும் உடையார் அறிவுடையோராவர். பிறர் கூறுங்கால் அவர் கருத்தின் உண்மையையும் தங்கருத்தின் உண்மையையும் ஆராய்ந்து செம்மை உடையதனை மேற்கொள்ள வேண்டுதலின், உண்மையை ஆராயும் உணர்வு அறிவுடையோர்க்கு இன்றியமையாததாயிற்று. நீலம் உண்ட பொருள் தன்னை யடுத்த பொருளையும் நீலமாக்குதல் போல, மூர்க்கன் தான்கொண்ட தவறுடையஅப்பொருளையே பிறருக்கும் போதிக்க முற்படுவன். 'ஆகாதே உண்டுது நீலம் பிறிது' என்பது பழமொழி. (5)
|