பக்கம் எண் :

65

95. தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
யாவரே யாயினும் நன்கொழுகார் கைக்குமே
தேவரே தின்னினும் வேம்பு.

(சொ-ள்.) தெற்ற ஒருவரை - தெளிவாக நண்பு பூண்ட ஒருவரை, தீதுரை கண்டக்கால் - ஒருவர் பொல்லாங்குரைக்கும் உரையைக் கேட்டால், இற்றே - நம்மையும் இப்பெற்றியே உரைப்பார் என்று கருதி, அவரை தெளியற்க - அவரை நம்பாதொழிக, தேவரே தின்னினும் வேம்பு கைக்கும் - உண்பவர்கள் தேவர்களேயானாலும் வேம்பு கசக்குந் தன்மையது. (அதுபோல), யாவரே யாயினும் நன்கு ஒழுகார் - நட்புப் பூண்பவர்கள் மிகவும்சிறந்தவர்களாயினும் அவர்களோடு நன்றாக ஒழுகுதல்இலர்.

(க-து.) தீயவரை நட்பாகக்கொண்டு ஒழுகுதல்கூடாது.

(வி-ம்.) 'யாவரே யாயினும் நன்கு ஒழுகார்'என்றமையான் நட்புப் பூணுதற்குத் தகுதியற்றவர் என்றுவிலக்கி வைத்தல் வேண்டும்.

'கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு' என்பது பழமொழி.

(6)

96. காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை
நாடுறைய நல்கினும் நன்கொழுகார் - நாடொறும்
கையுள தாகி விடினும் குறும்பூழ்க்குச்
செய்யுள தாகு மனம்.

(சொ-ள்.) நாள்தொறும் கை உள தாகிவிடினும் - தினந்தோறும் கையின்கண் இருந்து வளர்ந்தாலும், குறும்பூழ்க்கு - காடைக்கு, மனம் செய் உளதாகும் - மனம் காட்டில் வசிப்பதிலேயே பொருந்தியிருக்கும். (அதுபோல), காடு உறை வாழ்க்கை கருவினை மாக்களை - காட்டின்கண் வசிக்கும் வாழ்க்கையால் கொடிய தொழில்களைச் செய்கின்ற விலங்கொப்பாரை, நாடு உறைய நல்கினும் நன்கு ஒழுகார் -நாட்டின்கண்ணே தங்கவிடினும் நன்னெறியில் ஒழுகார்.

(க-து.) கீழ்மக்கள் என்ன செய்யினும்திருந்தப்பெறார்.

(வி-ம்.) இடங் காரணமாகத்தான்தீவினை செய்கின்றார்களெனின் நாட்டின்கண் உள்ளகாலத்தும் செய்கின்றது அதுவே யாகலின் அஃதன்று.