பக்கம் எண் :

67

அழிக்கப்பட்ட நீரில், துடும்பல் எறிந்து - ததும்புமாறு நீரை வாரி எறிந்து, விடல் -அதனால் மூழ்கிவிடுதலை ஒக்கும்.

(க-து.) செய்த பழியை நீக்க அறியாது பின்னும் அது செய்தல் ஊர்வாரி நீரிலேபடிந்ததை ஒக்கும்.

(வி-ம்.) அகலுள் : ஒரு சொல்; ஊர் என்பது பொருள். துடும்புதல் என்பது துடும்பல் என விகாரம் பெற்றது. ததும்புதல் என்பது பொருள்.

'அகலுள் நீராலே துடும்பல் எறிந்துவிடல்' என்பது பழமொழி.

(9)

99. மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார்
பேணா துரைக்கும் உரைகேட் டுவந்ததுபோல்
ஊணார்ந் துதவுவ(து) ஒன் றில்லெனினும் கள்ளினைக்
காணாக் களிக்கும் களி.

(சொ-ள்.) மாணாப் பகைவரை - மாட்சிமையில்லாத பகைவர்களை, மாறு ஒறுக்கல்லாதார் - எதிர்த்து நின்று தண்டிக்க முடியாதவர்கள், பேணாது உரைக்கும் உரைகேட்டு உவந்ததுபோல் - தம் பகைவரைப் பொருட்படுத்தாது பிறர் இகழ்ந்து கூறும் சொற்களைக் கேட்டு மகிழ்ந்தவர்களைப் போன்று, ஊண் ஆர்ந்து உதவுவது ஒன்று இல் எனினும் - உணவாக உண்டு அதனால் அடையும் பயன் ஒரு சிறிதும் இல்லை யெனினும், கள்ளினைக் காணாக் களிக்கும் களி -கள்ளினைக்கண்ட அளவில் மகிழும் கீழ்மகன்.

(க-து.) கீழ்மகன் கள்ளினைக் கண்டஅளவிலேயே மகிழ்வு எய்துவான்.

(வி-ம்.) தம் பகைவரை ஒருவர் இகழ்ந்துரைக்கக் கேட்டால் தாம் பெறலான நன்மை சிறிதும் இல்லையாயினும், அவரை வென்றதுபோல் நினைத்து மகிழ்தல்போல, கீழ்மகன் கள்ளினைக் கண்ட அளவில் அடையும் பயன் இல்லை யெனினும் அதனை உண்டதுபோல் நினைந்து மகிழ்ச்சி உறுவான்.

(10)

100. உழந்ததூஉம் பேணா(து) ஒறுத்தமை கண்டும்
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப!
முழங்குறைப்பச் சாணீளு மாறு.