பக்கம் எண் :

68

(சொ-ள்.) தழங்(கு) கண் முழவு இரங்கும் தண் கடல் சேர்ப்ப - ஒலிக்கின்ற கண்ணை உடைய முழவுபோல் ஆரவாரிக்கும் குளிர்ந்த கடல் நாடனே!, உழந்ததும் பேணாது ஒறுத்தமை கண்டும் - தம்மொடு வருந்திப் போந்த நட்பினையும் பாராது தண்டித்தமையை அறிந்திருந்தும், விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல் - அவரிடத்து விருப்பமுடையார் போன்று தீய செயல்களைப் பின்பும் செய்தொழுகுதல், சாண் குறைப்ப - சாண் நீளமுள்ள தொன்றனைக் குறைக்க, முழம் நீளு மாறு - அது முழம் நீளமாக நீளுவது போலும்.

(க-து.) தீயவர்களைத் தண்டித்தாலும் பின்னரும் தீமையேசெய்ய முற்படுவர்.

(வி-ம்.) 'முழல் நீளுமாறு' என்றது முன்னினும் மிக்க தீமையையே புரிவார் என்பதைக் கருதி. 'முழம் குறைப்பச் சாண் நீளுமாறு' என்பது 'சுரை ஆழ அம்மி மிதப்ப' என்பதைப் போன்று மொழி மாற்றிப் பொருள்கொள்ள வேண்டுதலின், மொழிமாற்றுப் பொருள்கோள். தழங்குகண், தழங்கண் என வந்தது விகாரம். 'உழந்ததும்'என்றது,

‘அழிவி னவைநீக்கிஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு'

என்றதைக் கருதி,

'முழங் குறைப்பச் சாண் நீளுமாறு' என்பது பழமொழி.

(11)

101. அல்லவை செய்ப அலப்பின் அலவாக்கால்
செல்வ(து) அறிகலர் ஆகிச் சிதைத்தெழுப
கல்லாக் கயவர் இயல்போல் நரியிற்கூண்
நல்யாண்டும் தீயாண்டும் இல்.

(சொ-ள்.) அலப்பின் அல்லவை செய்ப - (கீழ்மக்கள் வறுமையுற்ற இடத்து அது காரணமாகத் தீமையைச் செய்துண்பார்கள், அலவாக்கால் - செல்வம் உற்ற இடத்து, செல்வது அறிகலர் ஆகி சிதைத்து எழுப - செல்லும் நன்னெறியை அறியாதவர்களாகி அறத்தைக் கெடுத்து ஒழுகுவார், கல்லா கயவர் இயல்போல் - கல்லாத கீழ் மக்களுக்கு நன்மை என்பதில்லாததுபோல, நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல் - நரியினுக்கு உணவு பெறுகின்ற நல்லகாலமும், பெறாத பஞ்ச காலமும் இல்லை.