(க-து.) கல்வியறிவில்லாத கயவர்கள் எக்காலமும் தீமையையே புரிந்தொழுகுவார்கள். (வி-ம்.) கல்லாக் கயவர் இயல்போல் என்றாரேனும். நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல்லாத இயல்போலும் கல்லாக் கயவர் இயல் என்பது பொருளாகக் கொள்க. நரிக்கு உணவுப்பஞ்சம் இல்லாததுபோல, கயவருக்குத் தீமைசெய்வதில் பஞ்சமில்லையாம். கயவர் நற்குணங்கள் ஒருசிறிதும்இல்லாதவர். 'நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல்' என்பது பழமொழி. (12) 102. கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப் பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ? ஊரறியா மூரியோ இல். (சொ-ள்.) ஊர் அறியா மூரியோ இல் - ஊரில் வாழ்பவர்களால் அறியப்படாத பொலி காளை இல்லை, (அதுபோல) கூர் அறிவினார்வாய் குணம் உடை சொல் கொள்ளாது - உண்மை ஞானம் உடையார் வாயால் சொல்லும் நற்குணம் உடைய சொற்களை மனத்துட் கொள்ளாது. கார் அறிவு கந்து ஆ(க) - அஞ்ஞானத்தைப் பற்றுக்கோடாகக்கொண்டு, கடியன செய்வாரை - தீய செயல்களைச் செய்தொழுகுவோரை, பேர் அறியார் ஆயின பேதைகள் யாருளர் - அவரது பேரினை அறியாதவர்களாகிய அறிவிலிகள் யாவர் உலகத்துளர். (இல்லை.) (க-து.) கயவர் எல்லோராலும் அறியப்படுவர். (வி-ம்.) மூரி என்றமையால் பேதைகளும் தம்மை அடக்குபவர்களும், விடுபவர்களுமின்றித் தம் விருப்பம்போல் நடப்பார்கள் என்பது பெறப்படும். அறிவுடையோரைப் பேதைகள் என்றது மூரிபோல்வாரின் பேதைமையைக் குறித்தல் வேண்டி. உலகத்தில் எங்கும் சென்று தமது தொழில்களை ஆற்றித் தமது புகழைப் பரவச் செய்திருத்தலான் யாருளர் என்றார். இவரும் ஒருவகையால்உலகத்தாரால் அறியப்படுவார் என்பது. 'ஊர் அறியா மூரியோ இல்' என்பது பழமொழி. (13) 103. நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம் பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார் மரம்பயில் சோலை மலைநாட! என்றும் குரங்கினுள் நன்முகத்த இல்.
|