கொளுத்தும் முறையைக் கண்டு, மனச் செம்மை யுடையராய் மகிழ்வெய்துவார்கள் என்பார், 'நரைமுதுமக்கள் (இருவரும்) உவப்ப முறைசெய்தான்' என்றார். சாட்சிகள் முதலிய பிற காரணங்கள் கொண்டு ஒரு வழக்கினை முடிவு செய்தலினும் வழக்குடையோர் சொற்களைக் கொண்டே தீர்ப்புக் கூறுதல் மிகவும் நுண்ணுணர்விற்று. முறைசெய்தல் - ஒருபாற் கோடாது கோல் ஓச்சுதல். (1) உரைமுடிவுகாணான், (2) இளமையோன் என்ற இரண்டு குறைகளையும், (1) சொல்லாலும், (2) நரை முடித்தலாலும் நிறைவு செய்தான். 'குலவித்தை கல்லாமலே உளவாம்' என்பது இச் செய்யுளிற் கண்ட பழமொழி. (6) 7. புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புனல் ஊர பொதுமக்கட்(கு) ஆகாதே பாம்பறியும் பாம்பின கால். (சொ-ள்.) நலமிக்க பூ புனல் ஊர - நன்மை மிகுந்த அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரனே!, பாம்பின கால் பாம்பறியும் - பாம்பினுடைய கால்களைத் தமக்கு இனமாகிய பாம்புகளே அறியுந் தன்மையுடையன. அதுபோல், புலமிக்கவரைப் புலமை தெரிதல் - அறிவிற் சிறந்தவர்களை அறிவினால் தெரிந்துகொள்ளும் திறம், புலம் மிக்கவர்க்கே புலனாம் - (அவர்கள் போன்ற) அறிவிற் சிறந்தவர்களுக்கே விளங்கும், பொதுமக்கட்கு ஆகாது - கல்வியறிவில்லாதவர்களுக்கு விளங்காது. (க-து.) கற்றோர் பெருமையைக் கற்றோர்அறிவார். (வி-ம்.) பொது, சிறப்பின்மைக் கருத்தில் வந்தது. பாம்பின : அகரம் ஆறாவதன் பன்மை. 'பாம்பின் கால்களைப் பாம்புகளே அறியும்.' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி. (7) 8. நல்லார் நலத்தை உணரின் அவரினும் நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும் அயிலாலே போழ்ப அயில். (சொ-ள்.) நல்ல மயில் ஆடும் மாமலை வெற்ப - கண்களுக்கினிய மயில்கள் (தோகையை விரித்து ஓகையொடு) நடமாடும் சிறந்த மலைநாட்டை யுடையவனே!, என்றும் - எக்காலத்தும். அயில் அயிலாலே போழ்ப -இரும்பைக் கூரிய இரும்பினாலேயே பிளப்பர் -
|