(சொ-ள்.) மரம் பயில் சோலை மலைநாட - மரங்கள் மிக்குச் செறிந்த சோலைகள் சூழ்ந்த மலைநாட்டிற்கு உரியவனே, குரங்கினுள் - குரங்கினங்களுள், நன்முகத்த - நல்ல முகத்தை உடையவை, இல் - இல்லை; (அதுபோல) நிரந்து வழிவந்த - பெருகி வழிவழியாகவந்த, நீசருள் எல்லாம் - தீயகுணமுடையாரெல்லாருள்ளும், பரந்து - பெருக ஆராய்ந்து, ஒருவர் நாடுங்கால் - ஒருவரைத் தேறும்பொழுது, பண்புடையார் - நல்ல குணமுடையார், தோன்றார் -காணப்படார். (க-து.) கீழ்மக்களுள் நல்லோர் காணப்படார். (வி-ம்.) இடையறாது கொடிய செயல்களையே புரிந்துவந்த குடியாதலின், அதனுள்தோன்றுவார்க்கும் அக்குணமே தோன்றுமல்லது நற்குணந் தோன்றாவாதலின் 'தோன்றார்'என்றார். 'குரங்கினுள் நன்முகத்த இல்' என்பது பழமொழி. (14) 104. ஊழாயி னாரைக் களைந்திட் டுதவாத கீழாயி னாரைப் பெருக்குதல் - யாழ்போலும் தீஞ்சொல் மழலையாய்! தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு விடல். (கொ-ள்.) யாழ்போலும் தீம்சொல் மழலையாய் - யாழிசையைப்போன்ற இனிமையான மழலைச்சொல்லை உடையாய்!, ஊழ் ஆயினாரைக் களைந்திட்டு - முறைப்படியே தமக்கு நன்மை செய்வாரை நீக்கிவிட்டு, உதவாத கீழ் ஆயினாரைப் பெருக்குதல் - பயன்படாத கீழ்மக்களைத் தம்மோடு மிகுதியும் சேர்த்தல், தேன் ஆர் பலா குறைத்து காஞ்சிரை நட்டுவிடல் - தேன் நிறைந்த பலாமரத்தை வெட்டி அவ்விடத்தில் எட்டி மரத்தை வைத்து நீர் முதலியன கொண்டு வளர்த்துவிடுதலோடொக்கும். (க-து.) கீழ்மக்களைத் தம்மோடு சேர்த்துக்கொள்ளுதல் துன்பத்திற் கேதுவாம். (வி-ம்.) பயன்படும் பலாமரத்தைக் குறைத்து இறுதிதரும் எட்டிமரத்தை நட்டுவைப்பதுபோல் பயன்தரும் அறிவுடையாரை நீக்கிக் கீழ்மக்களைப் பெருக்கிக்கொள்ளல்தனக்கு இறுதி பயக்கும். 'தேனார் பலாக் குறைத்துக் காஞ்சிரை நட்டுவிடல்' என்பது பழமொழி. (15)
|