பக்கம் எண் :

71

105. பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு
பூமேல் இசைமுரலும் ஊர! அதுவன்றோ
நாய்மேல் தவிசிடு மாறு.

(சொ-ள்.) பொறிவண்டு பூமேல் இசை முரலும் ஊர புள்ளிகளையுடைய வண்டுகள் பூக்களின்மீது இருந்து இசை பாடும் மருதநிலத் தலைவனே!, பெரியார்க்கு செய்யும் சிறப்பினை - அறிவிற் பெரியார்க்குச் செய்யும் சிறப்பினை, பேணி - விரும்பி, சிறியார்க்குச் செய்துவிடுதல் - அறிவிற் சிறியார்க்குச் செய்தல், அதுவன்றோ - அச்செயலன்றோ, தவிசு - யானைமேல் இடவேண்டிய கல்லணையை, நாய்மேல் இடுமாறு - இழிந்த நாயின்மீதுஇட்டதை ஒக்கும்.

(க-து.) பெரியோர்க்குச் செய்யும் சிறப்பினைச் சிறியோர்க்குச்செய்தலாகாது.

(வி-ம்.) யானைமேல் இடுந் தவிசினை நாய்மேல் இடின் நகைப்பிற்கிடனாதல்போல அறிவுடையோர்க்குச் செய்வனவற்றை அறிவிலார்க்குச் செய்தல் நகைப்பிற்கிடனாம்.

நாய்மேல் தவிசிடுமாறு' என்பது பழமொழி.

(16)

106. பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து
ஆசறு செய்யாராய் ஆற்றப் பெருகினும்
மாசற மாண்ட மனமுடையர் ஆகாத
கூதறைகள் ஆகார் குடி.

(சொ-ள்.) பேதுறவு தீர பெருக்க தலையளித்து ஆசு அறு செய்யாராய் - துன்பம் நீங்குமாறு மிகவும் அன்பு செய்து குற்றம் அற்றவைகளைச் செய்யாதவராய், ஆற்றப் பெருகினும் - செல்வத்தால் மிகப்பெருகி வாழ்ந்தாலும்; மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத கூதறைகள் - குற்றம் அற மாட்சிமைப்பட்ட மனமுடையராகாத கூளங்கள், குடி ஆகார் -நற்குடியிற் பிறந்தவராகார்.

(க-து.) கீழ்மக்கள் செல்வம் பெறினும்மனத்தூய்மையிலராகலின் உயர்குடியிற் பிறந்தாரைஒவ்வார்.

(வி-ம்.) கீழ்மக்கள் மிகுந்த செல்வம் பெற்றிருப்பினும் தூய்மையான மனமின்மையால் பிறர் துன்பம் நீங்குமாறுநல்ல