பக்கம் எண் :

73

(சொ-ள்.) மறுமை ஒன்று உண்டோ மனப்பட்ட எல்லாம் பெறுமாறு செய்ம்மின் என்பார் - மறுமை என்பது ஒன்று உளதோ? மனம் விரும்பியவற்றையெல்லாம் அடையும் தன்மையைச் செய்யுங்கள் என் றுபதேசிப்பவர், நறு நெய்யுள் கட்டி அடையைக் களைவித்து - நல்ல நெய்யுள் தோய்க்கப் பெற்றுப் பாகு கலந்த அடையை உண்ணாமல் நீக்கி, கண் சொரீஇ இட்டிகை தீற்றுபவர் -கண்களை மூடிச் நெங்கல்லை உண்ணச் செய்பவரோடு ஒப்பர்.

(க-து.) அறிவில்லார் நன்னெறி யிருக்கவும் தீநெறியைப் போதிப்பார்கள்.

(வி-ம்.) இம்மையில் நாம் செய்யும் செயல்களுக்குத் தக்கவாறு மறுபிறப்பு உண்டு என்பதை அறியாராய் மறுபிறப்பு இல்லை யென்பதை உபதேசிப்பர். மறுபிறப்பு இல்லையென்றால் நல்வினை தீவினைக்கு அஞ்சவேண்டுவதில்லை.ஆகையால் மனம் போனவாறே செய்க என் றுபதேசிப்பர்.

'கட்டி அடையைக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர்' என்பது பழமொழி.

(2)

109. கண்ணில் கயவர் கருத்துணர்ந்து கைமிக
நண்ணி அவர்க்கு நலனுடைய செய்பவேல்
எண்ணி இடர்வரும் என்னார் புலிமுகத்(து)
உண்ணி பறித்து விடல்.

(சொ-ள்.) கண்ணில் கயவர் கருத்து உணர்ந்து - கண்ணோட்டம் இல்லாத கீழ்மக்களது எண்ணத்தை அறிந்து, கைமிக நண்ணி அவர்க்கு நலனுடைய செய்பவேல் - செயல் மிக அவரையடைந்து அவர்க்கு வேண்டிய நன்மைகளைச் செய்வாராயின், (அங்ஙனம் செய்தல்) எண்ணி இடர் வரும் என்னார் - துன்பம் வரும் என்பதை ஆராயாதவராகி, புலிமுகத்து உண்ணி பறித்துவிடல் - இரக்கத்தால் புலியினது முகத்தின்கண் உள்ள உண்ணியை எடுத்துவிடுதலோ டொக்கும்.

(க-து.) தீயவர்களுக்கு நன்மை செய்தல் தனக்குக் கேடு தேடிக்கொள்ளுதலாக முடியும்.

(வி-ம்.) புலிமுகத்து உண்ணி பறிப்பார் எங்ஙனம் பிழையாரோ, அதுபோன்றேதீயவர்களுக்கு உதவி செய்வாரும் பிழைத்தல் இலர்.

'புலிமுகத்து உண்ணி பறித்துவிடல்' என்பது பழமொழி.

(3)