110. திருந்தாய்நீ ஆர்வத்தைத் தீமை உடையார் வருந்தினார் என்றே வயப்படுவ துண்டோ அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும் பொருந்தாமண் ஆகா சுவர். (சொ-ள்.) அரிந்து அரிகால் பெய்து அமைய கூட்டிய கண்ணும் - அரிதாளை அரிந்து செப்பம் செய்து பொருந்துமாறு தலைக் கூட்டிய விடத்தும், பொருந்தா மண் - அவர் எடுக்கும் பொழுதே பொருந்தாத மண், சுவர் ஆகா - பின்னர்ப் பொருந்திச் சுவராக ஆதல் இல்லை, (ஆதலால்) தீமை உடையார் தீய செயல்களை உடையார், வருந்தினார் என்றே வயப்படுதல் உண்டோ - நம் பொருட்டு இவர் வருத்தமுற்றார் என்பதற்காக வசமாகப் பொருந்துதல் உண்டோ (இல்லை), நீ ஆர்வத்தைத் திருந்தாய் - நெஞ்சே அவர்மேல் பூண்ட அன்பினை விட்டுத் திருந்துவாயாக. (க-து.) கீழ்மக்களுக்கு நன்மை செய்யினும் அதைஉட்கொண்டு செய்தார் விருப்பம்போல் நடவார். (வி-ம்.) சுவரோடு சேராத மண் பின்னர்ப் பொருந்துதல் இல்லாதவாறுபோல் கீழ்மக்கள் உதவி செய்தார் விருப்பத்தின்படி பொருந்துதல் இலர். கீழ்மக்களுக்கு என்ன உதவி செய்யினும்,அவர் விருப்பின்படியே நடப்பாராதலின் அவர்மேல்பூண்டஅன்பினை விட்டொழித்தல் வேண்டும். 'அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும் பொருந்தா மண் ஆகா சுவர்' என்பது பழமொழி. (4) 111. குலத்துச் சிறியார் கலாந்தணிப்பான் புக்கு விலக்குவார் மேலும் எழுதல் - நிலத்து நிலையழுங்க வேண்டிப் புடைத்தக்கால் வெண்மாத் தலைகீழாக் காதி விடல். (சொ-ள்.) குலத்து சிறியார் - குலத்தினால் சிறியவர்கள், கலாம் தணிப்பான் புக்கு விலக்குவார் மேலும் எழுதல் - (பிறரிடம் கொண்ட) பகைமையை நீக்கும்பொருட்டு இடைப்புகுந்து விலக்குவாரிடத்தும் சினந்து எழுதல், நிலத்து நிலை அழுங்க வேண்டி புடைத்தக்கால் - அவ்விடத்தில் நிற்கின்ற நிலை நீங்கும் பொருட்டு (சாட்டையால்) அடித்தவிடத்து, வெண் மா தலைகீழாகாதிவிடல் - வெள்ளிய குதிரையானது சவாரி செய்யத் தெரியாதவனைத் தலைகீழாகத் தள்ளித் துன்புறுத்துவதோ டொக்கும்.
|