(க-து.) கீழ்மக்கள் தமக்கு நன்மை செய்வோரிடத்திலும் வெகுண்டுஎழுவார்கள். (வி-ம்.) தாழ்ந்த குலத்திற் பிறந்தவர்களாதலின், இவர் நமக்குச் செய்வன நன்மை தீமை என்பன பகுத்துணரும் அறிவு இலதாயிற்று. ஆதலின், இடைநின்று விலக்குவார்மேல் சினங்கொள்வார் தாழ்ந்த குடியிற் பிறந்தவர்களாதலின், அவர்களது இயற்கை கலாம் விளைத்தலே யாகும். அவர்களது குலத்தின் இயற்கையாகி கலாம் விளைத்தலை யாரேனும் இடை நின்று விலக்குவாராயின்,அவரைச் சினத்தலும் அவரது இயற்கையேயாம் என்று கூறினும்ஆம். 'நிலத்து நிலையழுங்க வேண்டிப்புடைத்தக்கால் வெண்மாத் தலைகீழாக் காதிவிடல்' என்பது பழமொழி. (5) 112. சொல்லெதிர்ந்து தம்மை வழிபட்(டு) ஒழுகலராய்க் கல்லெறிந்தாற் போலக் கலாந்தலைக் கொள்வாரை இல்லிருந் தாற்ற முனிவித்தல் உள்ளிருந்(து) அச்சாணி தாங்கழிக்கு மாறு. (சொ-ள்.) சொல் எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய் - தாங்கூறும் அறிவுரைகளை யேற்றுக்கொண்டு தம்மை வழிபாடு செய்து ஒழுகாதவராய், கல் எறிந்தாற்போல கலாம் தலைக் கொள்வாரை - கற்களை வீசினாற்போன்ற தீய சொற்களைச் சொல்லிப் பகைமையை மேற்கொள்வாரை, இல்லிருந்து ஆற்ற முனிவித்தல் - அவர் வீட்டினுள்ளேயிருந்து மிகவும் அவரை முனிவித்தல், உள் இருந்து அச்சாணி தாம் கழிக்குமாறு - தேரின் உள்ளே இருந்து அச்சின் கண்சொருகும் ஆணியைத் தாமே நீக்கிவிடுவது போலாம். (க-து.) கீழ்மக்களது அருகில் இருந்து அவருக்குச் சின மூட்டுதல் தனக்குத் தீங்கினை விளைவித்துக்கொள்வதாக முடியும். (வி-ம்.) ஆற்ற முனிவித்தலாவது, அவர்கள் செய்கின்ற தீய செயல்களை அடிக்கடி எடுத்துக் கூறியும் அறிவுரைகளைக் கூறியும் வருதலால் அவர் மிக்க சினங்கொள்வர். அதனால் மிக்க இன்னல்களைச் செய்வார்கள். தேரினுள்ளே யிருந்தவன் அச்சாணியை நீக்கி அதனால் வருந் துன்பத்தைத் தானே தேடிக்கொள்ளுதல்போல் தீயோர் வீட்டிலிருந்துகொண்டு அவர்களை வெகுள்விப்பதும் தீமை ஆகும். தீயோர் தாமே தீங்கு செய்தலன்றித் தீங்குசெய்வோர் பலரிடமிருந்தும் காப்பாற்றி வந்தமையை ஒழிவர் ஆக, அவரும் பிறரும் நலிவர் என்பதாம்.
|