பக்கம் எண் :

76

'உள்ளிருந்து அச்சாணி தாங்கழிக்கு மாறு' என்பது பழமொழி.

(6)

113. நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா அறிவிலா மாக்களைப் பேணி
ஒழுக்கி அவரோ டுடனுறை செய்தல்
புழுப்பெய்து புண்பொதியு மாறு.

(சொ-ள்.) நாணார் - நாணத்தக்கனவற்றிற்கு நாணாராய் நயன் இல செய்து ஒழுகும் - நன்மையில்லாத செயல்களைச் செய்து ஒழுகுகின்ற, பேணா அறிவிலா மாக்களை - யாவரானும் விரும்பப்படாத அறிவு இல்லாத விலங்கு ஒப்பாரை, பேணி ஒழுக்கி - விரும்பிநடத்தி, அவரோடு உடன் உறை செய்தல் - அவருடன் கூடி வாழ்தலைச் செய்தல், புழு பெய்து புண் பொதியு மாறு - புழுவினை உள்ளே இட்டுப் புண்ணைமூடிவைத்ததோடு ஒக்கும்.

(க-து.) தீயாரோடு உடனுறையின் தீமையே விளையும்.

(வி-ம்.) நாணம், அன்பு, நன்மைசெய்தல் இம்மூன்றுமின்மையின் விலங்குகளுள்ளும் அறிவில்லாதவைகளாகக் கருதப்பட்டார்கள். புழு உள்ளேயே யிருந்து தீமைசெய்தல்போல இவர்களும் மறைவாக நின்று தீங்கியற்றுவார்கள்.

'புழுப் பெய்து புண் பொதியுமாறு' என்பது பழமொழி.

(7)

114. பொல்லாத சொல்லி மறைத்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும்தன் வாயால் கெடும்.

(சொ-ள்.) நல்லாய் - நற்குணமுடையாய்!, மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும் - மணலுள் பதிந்து மறைந்திருக்கும் தவளையும், தன் வாயால் கெடும் - தன்குரலைக் காட்டுதலால் தன் வாயாலேயே தன்னைத் தின்பார்க்கு அகப்பட்டு இறந்தொழியும், (அதுபோல) பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை - தீயனவற்றைக்கூறி ஒளித்து நிற்கும் அறிவிலான், தன் சொல்லாலே தன்னைத் துயர்படுக்கும் - தான்கூறும் சொற்களாலேயே தன்னைத் துன்பத்தின்கண்அகப்படுத்திக்கொள்வான்.

(க-து.) அறிவிலான் தன் வாயாலேயே தனக்குத் தீங்கு தேடிக்கொள்வான்.