(வி-ம்.) புறங்கூறுதலால் தன்னியல்பைத் தானே வெளியிட்டானா கின்றமையின், அது காரணமாக வருந்தீங்கு தன்னால் செய்து கொள்ளப்பட்டமையின், 'தன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்' என்றார். 'நுணலுந் தன் வாயால் கெடும்' என்பது பழமொழி. (8) 115. தாக்குற்ற போழ்தில்தமரேபோல் நன்குரைத்துப் போக்குற்ற போழ்தில் புறனழீஇ மேன்மைக்கண் நோக்கற் றவரைப் பழித்தல் என்? என்னானும் மூக்கற்ற தற்கில் பழி. (சொ-ள்.) என் ஆனும் - எப்படி ஆயினும், மூக்கற்றதற்கு பழி இல் - மூக்கு அறுபட்டதற்குப் பழிப்பு இல்லை (அதுபோல), தாக்கு உற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து - ஒருவரைத் தலைப்பட்ட பொழுது தம் உறவினரைப்போல் அன்புடன் நன்றாகப் புகழ்ந்துரைத்து, போக்குற்ற போழ்தில் - அவர் நீங்கிய இடத்து, புறன் அழீஇ - புறம் பேசுபவர்களைப் பற்றி அழித்துப் பேசுபவரால், மேன்மைக்கண் நோக்கு அற்றவரை - மேன்மைக் குணத்தின்கண் கருத்து இல்லாதவர்களை, பழித்தல் என் -இகழ்ந்துரைத்தல் ஏன்? (க-து.) புறங்கூறுவார் என்றும் திருந்தார். (வி-ம்.) மூக்கற்றதற்குப் பழிப்பில்லாததுபோல் மேன் மைக்கண் நோக்கமில்லாதவர்களிடம் புறங்கூறவேண்டா என்று இகழ்ந்துரைத்தலிற் பயனில்லை. 'மூக்கற்றதற் கில் பழி' என்பது பழமொழி. (9) 116. கோவாத சொல்லும் குணனிலா மாக்களை நாவாய் அடக்கல் அரிதாகும் - நாவாய் களிகள்போல் தூங்கும் கடற்சேர்ப்ப! வாங்கி வளிதோட்கு இடுவாரோ இல். (சொ-ள்.) நாவாய் களிகள்போல் தூங்கும் கடல் சேர்ப்ப - மரக்கலங்கள் கள்ளுண்டு ஆடும் களியர்போல ஆடுகின்ற கடல் நாடனே!, வளி வாங்கி - காற்றினை ஒரு கொள்கலத்துள் வாங்கி, தோட்கு இடுவாரோ - தோள்களுக்கு இடவல்லார் உளரோ?, இல் - இல்லை. (அதுபோல), கோவாத சொல்லும் - பொருத்தமில்லாதவைகளைக் கூறும், குணன் இலா மாக்களை -நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத விலங்கொப்பாரை, நாவாய் அடக்குதல் - நாவினிடத்து அடக்குதல், அரிதாகும் - இல்லையாம்.
|