பக்கம் எண் :

78

(க-து.) கீழ்மக்களின் நாவினை அடக்குதல் முடியாது.

(வி-ம்.) வளியைச் சேர்த்து வாங்கித் தோளிலிட வல்லார் இல்லையாதல் போல, நற்குண மில்லாதவர்களின் நாவினைஅடக்குதலும் இல்லையாயிற்று.

'வாங்கி வளிதோட்கு இடுவாரோ இல்' என்பது பழமொழி.

(10)

117. தெரியாதார்சொல்லும் திறனின்மை தீதாப்
பரியார் பயனின்மை செய்து - பெரியார்சொல்
கொள்ளாது தாந்தம்மைக் காவா தவர்பிறரைக்
கள்ளராச் செய்குறு வார்.

(சொ-ள்.) தெரியாதார் சொல்லும் திறன் இன்மை - (நன்மை தீமை) அறியாதார் கூறும் திறப்பாடில்லாச் செயல்களை, தீதா பரியார் - தீதாக நினைத்து நீக்கார், பயன் இன்மை செய்து - அவர் கூறிய பயனற்ற செயல்களைச் செய்து, பெரியோர் சொல் கொள்ளாது - அறிவிற் பெரியோர் கூறும் அறிவுரையை மனதுட்கொள்ளாது, தாம் தம்மைக் காவாதவர் - குற்றங்களினின்றும் தம்மைத்தாமே காத்துக்கொள்ள இயலாதவர்கள், பிறரை - தாம் செய்த குற்றத்தைக் கூறுகின்றவர்களை, கள்ளரா(க) செய்குறுவார் -குற்றம் உடையவர்களாகச் செய்வார்கள்.

(க-து.) கீழ்மக்கள் தமது குற்றத்தைஎடுத்துக் காட்டுபவர்களைக் குற்றவாளியாகச் செய்வார்கள்.

(வி-ம்.) கள்ளராச் செய்தல் - குற்றமுடையவராகச்செய்தல்.

தம்மைத் திருத்த வருபவர்களைக் குற்றமுடையவர்களாக ஆக்குவரேயன்றி அவர் சொற்கேட்டுத் தாம்திருந்துதல் இலர்.

'காவாதவர் பிறரைக் கள்ளராச் செய்திடுவார்' என்பது பழமொழி.

(11)

118. செய்த கொடுமை யுடையான் அதன்பயம்
எய்த உரையான் இடரினால் - எய்தி
மரிசாதி யாயிருந்த மன்றஞ்சு வார்க்குப்
பரிகாரம் யாதொன்றும் இல்.