பக்கம் எண் :

79

(சொ-ள்.) மரிசாதியாய் எய்தி இருந்த மன்று - நீதிமான்கள் பலரும் திரண்டு இருந்த அவையினைக் கண்டு, அஞ்சுவார்க்குப் பரிகாரம் யாதொன்றும் இல் - அஞ்சி உண்மையைக் கூறுகின்றவர்களுக்குச் செய்கின்றது யாதொன்றுமில்லை யாதலால், செய்த கொடுமை உடையான் - செய்த தீமையை உடையவன், அதன் பயம் எய்த இடரினால் உரையான் - பிறர் கேட்டவிடத்துக் கூறினால் வரும்அச்சம் தன்னை வந்தடைய அத்துன்பத்தால் கூறுவானல்லன்.

(க-து.) கீழ்மக்கள் உண்டாகும் துன்பத்திற் கஞ்சி நியாயசபையிலன்றி உண்மையைக் கூறமாட்டார்கள்.

(வி-ம்.) தனித்துக்கூறின் தண்டஞ் செய்வாராதலான் மன்றிலன்றிக் கூறுதலிலர். மரித்தல் - ஒன்றுசேர்தல். சாதி - கூட்டம்; ஒன்று சேர்ந்து குழுமியிருந்தநீதிமான்கள்.

'மன்றஞ்சுவார்க்குப் பரிகாரம்யாதொன்றும் இல்' என்பது பழமொழி.

(12)

119. முதுமக்கள் அன்றி முனிதக்கார் ஆய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் - அதுமன்னும்
குன்றத்து வீழும் கொடியருவி நன்னாட!
மன்றத்து மையல்சேர்ந் தற்று.

(சொ-ள்.) மன்னும் குன்றத்து வீழும் கொடி அருவி நன்னாட - நிலைபெற்ற மலையினின்றும் இழியும் கொடிபோன்ற அருவியை உடைய நல்ல மலைநாடனே!, முதுமக்கள் அன்றி - அறிவால் நிரம்பிய மக்களாய் இல்லையாதலோடு, முனிதக்கார் ஆய பொதுமக்கள் - வெறுக்கத்தக்கவர்களாகிய சிறப்பில்லாத மக்கள், பொல்லா ஒழுக்கம் அது - தீய ஒழுக்கத்தைப் பூண்டிருத்தல் ஆகிய அது, மன்றத்து மையல் சேர்ந்தற்று - நான்கு வீதிகள் சேரும் சதுக்கத்திலே பித்துஏறியவன் இருந்ததை ஒக்கும்.

(க-து.) கீழ்மக்களது தீய ஒழுக்கம் மிகவும்அஞ்சத்தக்கது.

(வி-ம்.) தீய ஒழுக்கத்தை உடையவராயினும் அறிவிற் சிறந்தவராய் இருப்பின் தமது ஒழுக்கத்தை மறைத்தல் கூடும். அது இன்மை தமது தீய ஒழுக்கத்தைப் பிறருக்கு நன்றாக விளக்கிக் காட்டுமாதலால், சதுக்கத்தின்கண் இருந்த மதிமயங்கியோனுக்கு ஒப்பாயினர். பித்தேறியவனுக்குப் பலரையும் துன்புறுத்தச்சதுக்கம் நல்ல இடம் ஆயினாற்போல, பிறரை வருத்தும் பொருட்டு வேகும் தீய ஒழுக்கம் உடையவர் என்பதாம்.