பக்கம் எண் :

8

(அதுபோல), நல்லார் நலத்தை உணரின் - கற்றவாறமைந்த நற்குணமுடையோர்களது அறிவின் நன்மையை அறிவதாயின், அவரினும் நல்லார் உணர்ப- அவர்களைவிடக் கல்வி ஒழுக்கங்களில் மிக்க அறிஞர்களே அதனை அறிவார்கள், பிறருணரார் - கல்வி ஒன்றே உடையஒத்தாரும் அவையின்றி இழிந்தாரும் அறியமாட்டார்கள்.

(க-து.) நல்லார் அறிவினை அவரினும்நல்லாரே அறிவர்.

(வி-ம்.) இரும்பினை அதையொத்த கூர்மையற்ற வேறோர் இரும்பு கொண்டு பிளத்த லியலாதாகலின் நல்லார் நலத்தையும் அவரை ஒத்தோரால் அறிந்துகொள்ளக்கூடாது. ஆகவே பிறர் என்பது கல்வி ஒழுக்கம் என்ற இரண்டிலும் ஒன்றே உடையாரும் இரண்டு மின்றி இழிந்தாரு மாவர்.நல்லார் நலத்தை அவரினும் நல்லார் அறிவர்.

'இரும்பை இரும்புகொண்டு துணித்தல் வேண்டும்.' - இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(8)

9. கற்(று)அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.

(சொ-ள்.) அறைகல் அருவி அணிமலை நாட - பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை யுடையவனே!, நிறைகுடம் நீர்தளும்பல் இல் - நீர் நிறைந்த குடம் ஆரவாரித் தலைதல் இல்லை, (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் - நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்குரிய செயல்களாம். அறியாதார் - கற்றதோடமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார், பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் - மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

(க-து.) கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்துபேசமாட்டார்கள்.

(வி-ம்.) 'அறியாதார்' என்றதனாலும் உண்மையை ஓராதவர்க்குள்ள மறதி வயப்பட்டு 'பொச்சாந்து புகழ்ந்துரைப்பர்' என்றதனாலும் நூல்களை மட்டும் கற்றுக் குறை குடத்தை ஒத்தனர் என்பது பெறப்பட்டது. முன்னும் ஒருகால் தன்னைப்