பக்கம் எண் :

80

'மன்றத்துமையல் சேர்ந்தற்று' என்பது பழமொழி.

(13)

120. தருக்கி ஒழுகித் தகவல்ல செய்தும்
பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்
கரப்புடை யுள்ளங் கனற்று பவரே
செருப்பிடைப் பட்ட பரல்.

(சொ-ள்.) தருக்கி ஒழுகி தகவல்ல செய்தும் - (பிறர் தன்னை மதியாத இடத்து) தன்னைத்தானே மதித்து ஒழுகித் தகுதியல்லாத செயல்களைச் செய்தும், பெருக்க மதித்தபின் பேணாத செய்தும் - பிறர் தன்னை மிகுதியும் மதித்த இடத்து அவர் விரும்பத் தகாதனவற்றைச் செய்தும், கரப்பு உடை உள்ளம் கனற்றுபவர் - மறைந்த எண்ணங்கொண்டு பிறரை வருத்துபவர், செருப்பு இடைப்பட்ட பரல் - செருப்பின்கண் பொருந்தி இருக்கும்பருக்கைக் கல்லை ஒப்பர்.

(க-து.) கரந்த உள்ளமுடைய கீழ்மக்கள் பெரியோர் செய்யும் செயல்களுக்கு இடையூறாக நிற்பர்.

(வி-ம்.) செருப்பின்கண் உள்ள பரல் தன்னை உடையானைச் செல்லாதவாறு தடுத்தல்போல, கரவுடையார் பெரியோர் செயல்களுக்கு இடையூறாக நின்று விலக்குவர்.

'செருப்பிடைச் சிறுபரல் அன்னன்' என்ற புறநானூற்றடியும்,அதன் உரையும் இக்கருத்தை நன்கு வலியுறுத்துவனவாம்.

'செருப்பிடைப் பட்ட பரல்' என்பது பழமொழி.

(14)

121. உறுமக்க ளாக ஒருவரை நாட்டிப்
பெறுமாற்ற மின்றிப் பெயர்த்தே யொழிதல்
சிறுமைக் கமைந்ததோர் செய்கை அதுவே
குறுமக்கள் காவு நடல்.

(சொ-ள்.) உறுமக்களாக ஒருவரை நாட்டி - வேலைக்குத் தகுதியானவராக ஒருவரை வேலையில் இருக்கச்செய்து, பெறுமாற்றம் இன்றி பெயர்த்தே ஒழிதல் - அவர் செய்த குற்றம் உண்டு என்னும் சொல் இன்றியே அவரை வேலையினின்றும்தவிர்த் தொழிதல், சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை - கீழ்மக்களுக்குப் பொருந்திய செயலாம். அது - அச்செயல், குறுமக்கள் காவு நடல் - பிள்ளைகள் சோலைவைத்து வளர்ப்பதை ஒக்கும்.