(க-து.) கீழ்மக்கள் தொடங்கிய செயல் முடிவுபெறாது. (வி-ம்.) சோலை வைக்கப் புகுந்த சிறுவர்கள் செடிகளை நட்ட இடத்தில் தரிக்கவொட்டாராதலால் சோலை உண்டாதலில்லை. அதுபோல, கீழ்மக்களும் அடிக்கடி செயலாற்றுவோரை மாற்றுந்தொழிலுடையராதலின், அவர் நினைத்த காரியம் முடிவு பெறுவதில்லை. சிறுமைக் குணம் மிகுதியும்உடையவர்கள் கீழ்மக்களாதலால் சிறுமை எனப்பட்டனர். 'குறுமக்கள் காவு நடல்' என்பது பழமொழி. (15) 122. உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய நிறையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல் வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே சுரையாழ அம்மி மிதப்பு. (சொ-ள்.) வரைதாழ் இலங்கு அருவிவெற்ப - மலையினின்றும் விழுகின்ற ஒளிவிளங்கும் அருவியை உடைய மலை நாடனே!, உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய - புகழ் நிறைந்த குடியிற் பிறந்த அறிவு நிறைந்தவர்கள் வறுமையால் வருந்திநிற்க, நிறை உளர் அல்லார் நிமிர்ந்து பெருகல் அது - நல்ல குடிமரபின் வரிசையில் சேராதவரான கீழோர் செல்வத்தால் தலைநிமிர்ந்து பெருகுதல் ஆகிய அது, சுரை ஆழ அம்மி மிதப்பு - நீரிலே சுரைஆழ்வதையும் அம்மி மிதப்பதையும் ஒக்கும். (க-து.) நற்குடிப் பிறவார் செல்வத்தால் தருக்கிநிற்பர். (வி-ம்.) ஆழவேண்டியது மிதந்தும், மிதக்கவேண்டியது ஆழ்ந்தும் இருத்தல்போல, செல்வம் பெறவேண்டியவர் வறுமையுற்றும் வறுமையடைய வேண்டியவர் செல்வம் பெற்றும் இருப்பர். சுரை ஆழ்தலும் அம்மி மிதத்தலும் இயற்கையில் பொருந்தாதவாறுபோல, சான்றோர் வருந்திநிற்கக் கீழோர் பெருகிநிற்றல் பொருந்தாததொன்றாம். 'சுரை ஆழ அம்மி மிதப்ப' என்பது பழமொழி. (16)
|