பக்கம் எண் :

82

123. தேர்ந்துகண்ணோடாது தீவினையும் அஞ்சலராய்ச்
சேர்ந்தாரை யெல்லாம் சிறிதுரைத்துத் - தீர்ந்த
விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும்
நரகர்கட் கில்லையோ நஞ்சு.

(சொ-ள்.) தேர்ந்து கண்ணோடாது - ஆராய்ந்து கண்ணோட்டம் செலுத்தாது, தீவினையும் அஞ்சலராய் - அஞ்சவேண்டிய தீய செயல்களுக்கும் அஞ்சாதவராய், சேர்ந்தாரையெல்லாம் சிறிது உரைத்து - தம்மைச் சேர்ந்தார் எல்லோரையும் சிறுமைப்படப்பேசி, தீர்ந்த விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும் - நெருங்கிய உறவினர்கட்கு எல்லாம் வெறுப்பானவைகளையே செய்யும், நரகர்கட்கு - நரகம் புக இருக்கின்றவர்களுக்கு, நஞ்சு இல்லையோ - (அவர் உயிரை உண்ணும்)விடம் உலகில் இல்லையோ?

(க-து.) இத்தகைய கீழ்மக்கள் இருப்பதைவிடஇறப்பதே நன்று.

(வி-ம்.) கண்ணோடாது என்பது, தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுத்தல். முறையே அயலார், உயிர்ப் பிராணிகள், நட்டார், உறவினர் முதலியோர்கட்கெல்லாம் இவர் தீங்கு செய்து ஒழுகுதலின், இவரைக் கொல்லவல்ல நஞ்சு இல்லையோ என்றார். இவர் நரகம் புகுதல் உறுதியாதலின் அவ்வுலகத்து மக்களாகவே கருதிநரகர் என்றார்.

'நரகர்கட்கு இல்லையோ நஞ்சு' என்பது பழமொழி.

(17)

14.நட்பின் இயல்பு

124. ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே
விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி.

(சொ-ள்.) ஒட்டிய காதல் உமையாள் - பொருந்திய அன்பினை உடைய உமையை, ஒருபாலா (1) - ஒரு கூறாக, கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் - தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக்கொடியினையும் உடைய சிவபிரான், கொண்டான் - ஏற்றுக்கொண்டான், நட்டாரை ஒட்டியுழி - தம்மொடு நட்புச் செய்தாரைத் தாம் அடைந்தவிடத்து, ஆங்கு விட்டு அகலா முழுமெய்யும் - அங்கே விட்டு நீங்காத தம் உடம்புமுழுதும், கொள்ப - கொள்வார்கள்.