(க-து.) நல்லோர் தம் நட்பினரிடத்துத் தாம் வேறு,அவர் வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர். (வி-ம்.) சிவன் ஒரு பாகத்தில் கொண்டான்; நட்டார் தம் மெய் முழுதுங் கொண்டார் என நல்லோரது நட்பின் திறம் உயர்த்திக் கூறப்பட்டது. நல்லோர் நட்பினர் அடைந்த இன்ப துன்பங்கள் தாம்அடைந்ததாகவே நினைப்பர். 'ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டான்' என்பது பழமொழி. (1) 125. புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த உரையும் பொருள்முடிவும் ஒன்றால் - உரைபிறிது கொண்டெடுத்துக் கூறல் கொடுங்கழித் தண்சேர்ப்ப ஒன்றேற்று வெண்படைக்கோள் ஒன்று. (சொ-ள்.) கொடுங் கழி தண் சேர்ப்ப - வளைந்த உப்பங்கழிகளை உடைய குளிர்ந்த கடல் நாடனே!, புரையின்றி நட்டார்க்கு - குற்றம் இன்றி நட்புப் பூண்டவர்களுக்கு, நட்டார் உரைத்த - அவரின் நட்பினர் கூறிய, உரையும் பொருள் முடிவும் ஒன்றால் - சொல்லும் அதன் பொருளும் வேறுபடாது ஒன்றேயாம், உரை பிறிது கொண்டு - பொருள் வேறாக மனத்தில் நினைத்துக் கொண்டு, எடுத்துக் கூறல் - வஞ்சனையால் விளக்கிக் கூறுதல், ஒன்று ஏற்றி - ஒருவனது பா ஒன்றினைச் செலுத்தி, வெண் - வெண்பாவாக, படைக்கோள் ஒன்று -செய்து கொள்ளுகின்ற ஒன்றை ஒக்கும். (க-து.) மனம் வேறு, சொல் வேறாக, நட்பினரிடத்தில் கூறுதல் மிக்கவஞ்சனை பொருந்தியதாகக் கருதப்படும். (வி-ம்.) வெண் என்பது வெண்பா என்பதன் குறை. படைக்கோள் - படைத்துக்கொள்ளுதல், ஒருவருடைய செய்யுளைத் தம் செய்யுளாகச் செய்துகொள்வது வஞ்சனை பொருந்தியசெயலாகக் கருதப்படுகின்றது. 'ஒன்றேற்றி வெண்படைக்கோள் ஒன்று' என்பது பழமொழி. (2)
|