126. விலங்கேயும் தம்மோ டுடனுறைதல் மேவும் கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா - இலங்கருவி தாஅய் இழியும் மலைநாட! இன்னாதே பேஎயோ டானும் பிரிவு. (சொ-ள்.) இலங்கு அருவி தாய் இழியும் மலைநாட - விளங்குகின்ற அருவிகள் பாய்ந்து இழியாநின்ற மலைநாடனே!, விலங்கேயும் - விலங்கேயாயினும், தம்மோடு உடனுறைதல் மேவும் கலந்தாரை - தன்னோடுகூடி வசித்து மனத்தாற் கலந்தாரை, கைவிடுதல் ஒல்லா - விட்டு நீங்குதல் செய்யாது. (ஆதலால்), பேயோடு ஆயினும் - தம்மோடு நட்புச்செய்து துன்பத்தை விளைவிக்கும் பேயேயானாலும், பிரிவு இன்னாது - விட்டுப் பிரிதல் துன்பத்தைத் தருவதாம். (க-து.) தம்மோடு கலந்து பழகி மனம்ஒன்றுபட்ட நண்பினரைப் பிரிதல் துன்பந்தருவதாம். (வி-ம்.) ஐயறிவுடைய விலங்கும் பிரியாது என்றமையால் ஆறறிவுடையோர் பிரியாதிருத்தல் வேண்டும் என்பது சொல்லாமலே பெறப்பட்டது. 'நெஞ்சத் தகநக நட்பது நட்பு' என்பராகலின், மனம் கலந்து நட்புச் செய்தலே நட்பு எனப்படும். இதுவே 'கலந்தாரை' என்றதில் குறிக்கப்பட்டது. நட்பிற்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் இன்மையின் துன்பந்தரும் பேயேயாயினும் பிரிதல் இன்னாமை உடையதாயிற்று. விலங்கேயானாலும் தம்மோடு நட்புப்பூண்டார் துன்புறுங்கால் அவரைக் கைவிட்டு நீங்காது. ஆகையால் பேயேயாயினும் துன்புறுங்கால் அதனைக் கைவிட்டு நீங்குதல் கூடாது என்று பொருள் கூறினும் ஆம். 'அழிவி னவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்ல லுழப்பதாம் நட்பு' என்றபடி துன்பம் வருங்கால் அதனை நீக்க முயற்சிசெய்து நீங்காதொழியின் அதனோடு உடன் இருந்து அத் துன்பத்தை அடையவேண்டு மென்பதாம். இப்பொருள் 'கை விடுதல்' என்ற சொல்லாற்றலாற் கொள்ளப்பட்டது. 'இன்னாதே பேஎயோடானும் பிரிவு' என்பது பழமொழி. (3) 127. இனியாரை உற்ற இடர்தீர் உபாயம் முனியார் செயினும் மொழியால் முடியா துனியால் திரையுலாம் நூங்குநீர்ச் சேர்ப்ப! பனியால் குளம்நிறைதல் இல்.
|