புதிய நட்பே 'நன்று' என்று கூறப்பட்டது. முழம், சாண் என்பன காலத்தின் தூரத்தை உணர்த்துவன, பழைமை, புதுமை என்பனவற்றை உணர்த்தின. தீர்ந்தேம் - தாம் வேறு,அவர் வேறு என்ற வேற்றுமையினின்றும் நீங்கினேம். 'முழ நட்பிற் சாணுட்கு நன்று' என்பது பழமொழி. (6) 130. கொழித்துக் கொளப்பட்ட நண்பி னவரைப் பழித்துப் பலர்நடுவண் சொல்லாடார் - என்கொல்? விழித்தலரும் நெய்தற் றுறைவா! உரையார் இழித்தக்க காணிற் கனா. (சொ-ள்.) விழித்து அலரும் நெய்தல் துறைவா - கண்கள் விழித்தலை ஒத்து மலரும் நெய்தற் பூக்களை உடைய கடல் நாடனே!, கொழித்து கொளப்பட்ட நண்பினவரை - ஆராய்ந்து தூயதாகக் கொள்ளப்பட்ட நட்பினை உடையாரை, பலர் நடுவண் பழித்து சொல்லாடார் - பலர் இடையே இகழ்ந்து கூறமாட்டார்கள் அறிவுடையோர், என்கொல் - என்ன காரணமெனில், இழித்தக்க - (பிறரிடம் கூறினால்) தமக்கு இழிவைத் தருவனவற்றை, கனா காணின் - கனவின்கண் கண்டாராயின், உரையார் - (தமக்கு இழிவு வரும் என்று கருதி) பிறரிடம் கூறார் (அதுபோல). (க-து.) அறிவுடையோர் தம் நட்பாரிடத்துள்ளகுற்றங்களை தூற்றமாட்டார்கள். (வி-ம்.) ‘குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு' என்பாராகலின். அங்ஙனம் ஆராய்ந்து தூயதாகக் கொள்ளப்பட்ட நட்பு 'கொழித்துக் கொள்ளப்பட்ட நட்பு' எனப்பட்டது. இழித்தக்க காணின் உரையாதொழிதல்போல, பலர்நடுவண் பழித்தல் கூடாதென்பதாம். தமக்கு இழிவைத்தரும் கனாவைப் பலர் நடுவண் கூறின், இழிவு தம்மை அடைதல்போல, நட்டார் குற்றம் கூறின், அவர் குற்றம் ஆராயப்படாது அதனைக் கூறுவாரே குற்றத்திலகப்பட்டு இழிக்கப்படுவர் என்பதாயிற்று. குற்றமாவன :- நட்டாரது பிழை காணும் பெற்றியுடையாரெனவும், அதனைப் பொறுக்கும் ஆற்றலிலரெனவும் தூற்றுந் தொழிலுடையாரெனவும் போல்வன.தம் நட்டார் குற்றம் கூறுதல் தங்குற்றத்தைக்காட்டுதலாகுமென்றே அறிவுடையோர் கூறமாட்டார்கள். 'உரையார் இழித்தக்க காணிற் கனா' என்பது பழமொழி. (7)
|