131. நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக் கண்கண்ட குற்றம் உளவெனினும் - காய்ந்தீயார் பண்கொண்ட தீஞ்சொல் பணைத்தோளாய்? யாருளரோ தங்கன்று சாக்கறப் பார். (சொ-ள்.) பண்கொண்ட தீம் சொல் பணைத்தோளாய் - பண்ணினது இயல்பைக் கொண்ட இனிமையான சொற்களையும் மூங்கில்போன்ற தோள்களையும் உடையாய்!, நண்பு ஒன்றி தம்மாலே நாட்டப்பட்டார்களை - நண்பு செய்து தம்மால் நிலை நிறுத்தப்பட்டவர்களை, கண் கண்ட குற்றம் உள எனினும் - தாம் கண்கூடாகக் கண்ட குற்றம் அவர் மாட்டு இருக்கின்றன என்றறிந்தாலும், காய்ந்தீயார் - அறிவுடையோர் கோபிக்கமாட்டார்கள், தம் கன்று சா(வ)க் கறப்பார் யாருளர் - தம்முடைய கன்றிற்குப் பால்விடாமல் அஃது இறக்கும்படி பசுவினைக் கறப்பவர்யாருமிலர் (அதுபோல). (க-து.) அறிவுடையோர் தம் நட்டார்குற்றம் செய்யினும் அதுகருதிச் சினத்தல் இலர். (வி-ம்.) காய்ந்தீயார் :காய்ந்தீ : முன்னிலை யேவற்றிரி சொல். ஆர் : பலர்பால்விகுதி. அறிவுடையார் தாம் கன்று சாவுமாறு பால்கறவார்,அதுபோலவே, தம் நட்டாரது குற்றங்காரணமாக அவரைச்சினவார் அறிவுடையோர். நட்புச்செய்த பின்னர்தாம் அவர் என்னும் வேறுபாடின்மையால், அவரைக்கோபித்தல் தம்மைக் கோபித்தலை யொக்கும் என்பதுகருதிச்சினவார் என்பதாம். சாவக் கறப்பார் என்பதுசாக்கறப்பார் என்று வந்தது விகாரம். யாருளரோ தங்கன்று சாக் கறப்பார்என்பது பழமொழி. (8) 132. தந்தீமை யில்லாதார் நட்டவர் தீமையையும் எந்தீமை யென்றே உணர்பதாம் - அந்தண் பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப! ஒருவர் பொறையிருவர் நட்பு. (சொ-ள்.) அந்தண் பொருதிரை வந்து உலா(வு)ம் பொங்கு நீர் சேர்ப்ப - அழகிய குளிர்ந்த கரைகளில் மோதுகின்ற அலைகள் மேன்மேல் வந்து வீசுகின்ற மிகுந்த நீரை உடைய கடல்நாடனே!, ஒருவர் பொறை யிருவர் நட்பு - ஒருவர்
|