பக்கம் எண் :

89

பொறுக்கும் பொறுமையால் இருவரது நட்பும் நிலைபெறுமாதலால், தம் தீமை இல்லாதார் - நட்டார்க்குத் தம்மால் செய்யப்பட்டதொரு தீமையில்லாதார், நட்டவர் தீமையையும் - தம் நட்டார் தமக்குச் செய்த தீமையையும், எம் தீமை என்றே உணர்ப - எம்மால் செய்யப்பட்ட தீமையேஎன்று நினைத்துப் பொறுப்பார்கள்.

(க-து.) நட்புப் பூண்டொழுகு மிருவருள் ஒருவராவதுபொறுமை மேற்கொண்டொழுகுதல் அவர்கள் நட்பு நீடித்துநிற்பதற்கு ஏதுவாகும்.

(வி-ம்.) இருவரும் பொறுமையில்லாதவராக இருப்பின், அவர்கள் நட்பு நீடித்து நிற்காது. இருவருள் ஒருவராவது பொறுமை பூண்டிருத்தல் இன்றியமையாத தொன்றாம்.

'குடிப்பிறந்து தன்கட் பழிநாணுவானைக்
கொடுத்தும் கொளல்வேண்டு நட்பு'

பழிநாணுதல் - நட்டார் செய்த தீமையைப் பழிக்கஞ்சிப் பொறுத்தல். இதனுள் பொறுமை உடையானது நட்பினை விலை கொடுத்துக் கொள்க என்பதும்,பொறுமையின் இன்றியமையாமையை வலியுறுத்தும்.

'ஒருவர் பொறை யிருவர் நட்பு' என்பது பழமொழி.

(9)

133. தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர்எனப் பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற
அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார்
மறையார் மருத்துவர்க்கு நோய்.

(சொ-ள்.) தெற்ற அறை ஆர் அணி வளையாய் - தெளிவாக அறைதலைப் பொருந்திய (ஒலிக்கின்ற) அழகிய வளையினை உடையாய்!, தீர்தல் உறுவார் - பிணி நீங்க விரும்புவோர், மருத்துவர்க்கு நோய் மறையார் - வைத்தியனுக்கு நோயை மறைத்துச் சொல்லார் (விளங்கச் சொல்லுவர்). (அதுபோல), தெற்றப் பரிந்து - மிகவும் மனம் இரங்கி, ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு - தனது துன்பத்தை அறியின் தீர்ப்பர் என்று தம்மால் கருதப்பட்டார்க்கு, தாம் உற்ற குறையை உரைப்ப - தாம்அடைந்த துன்பத்தைக் கூறுவார்கள் அறிவுடையோர்.

(க-து.) அறிவுடையோர் தீர்க்கத்தக்கவரிடம் தம் குறையைக் கூறுவார்கள்.