புகழ்ந்து கூறி மறதி வயப்பட்டு மீண்டும் மீண்டும் புகழ்ந்து உரைப்பர் என்று உரை கூறினும் ஆம். 'நிறை குடம் நீர்தளும் பல் இல்லை' - இது செய்யுளிற் கண்ட பழமொழி. (9) 10. விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார் கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப் பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்துப் பட்ட மறு. (சொ-ள்.) விதிப்பட்ட நூலுணர்ந்து - நல்ல நெறிகள் அமைந்த நூல்களை அறிந்து, வேற்றுமையில்லார் - நூல்களின் விதிகளுக்கும் தமது வாழ்விற்கும் வேறுபாடு இல்லாதவர்கள், கதிப்பவர் நூலினைக் கையிகந்தாராகி - மாறுபட்டு எழுந்தோர்களுடைய நூலின் கொள்கைகளைத் தம் வன்மையால் வென்று, பதிப்பட வாழ்வார் - தலைமைப் பேறுற வாழ்கின்ற அறிஞர்கள், பழியாய செய்தல் - இகழ்தற்குரிய செயல்களைச் செய்தல், மதிப்புறத்துப் பட்ட மறு - திங்களின்கண் இலங்கும் களங்கம் போல் விளங்கித்தோன்றும். (க-து.) அறிவுடையோர் மாசுற்ற செயல்களைச் செய்வாராயின் அதுதேசுற்றுத் தோன்றும். (வி-ம்.) மதிப்புறம், புறம் : ஏழனுருபு. மதியின் புறத்தில் ஊர்கோளென வளைந்து விளங்கித் தோன்றும் களங்கம் போல அறிவுடையோர் செய்த பழியாயின அவரைச் சூழ்ந்து நின்று விளங்கும் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். இதற்கு மதிப்புறம், மதியின் ஓரம் என்று பொருள் கொள்க. 'மதிப்புறத்துப் பட்ட மறு' - இஃது இச்செய்யுளின்கண் எடுத்தாண்ட பழமொழி. (10) 2.கல்லாதார் 11. கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார் தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல் அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை நாவல்கீழ்ப் பெற்ற கனி. (சொ-ள்.) கற்றானும் கற்றார் வாய்க் கேட்டானும் - நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும், இல்லாதார் - கல்வி கேள்வி இல்லாதவர்கள், தெற்ற உணரார்
|