பக்கம் எண் :

90

(வி-ம்.) தம்முடைய குறையை முடிக்க வல்லார் என்றறியின் அவரிடத்துக் குறையைக் கூறுக.அங்ஙனமிருந்தும் அவர் அக்குறையை நீக்காவிடில் அவர்க்குப்பழி உளதாகுமே யன்றி தமக்குப் பழி இல்லை என்பதாம்.

'இரக்க இரத்தக்கார்க் காணின்கரப்பின்
அவர்பழி தம்பழி யன்று'

என்பதும் இக்கருத்துப் பற்றியது.

'மறையார் மருத்துவர்க்கு நோய்' என்பது பழமொழி.

(10)

134. முட்டின்(று) ஒருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல்.

(சொ-ள்.) கட்டு அலர் தார் மார்ப - மொட்டுக்கள் முறுக்குடைந்து மலருகின்ற மாலையை உடைய மார்பனே!, முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண் - குறைவின்றி ஒருவர் செல்வமுடையராய பொழுதின்கண், அட்டிற்று - சமைத்த உணவினை, தின்பவர் ஆயிரவர் ஆப - உண்ணவருவோர் ஆயிரம் பேர் உளராவர், கலிஊழிக் காலத்து - கலியுகமாகிய காலத்தில், கெட்டார்க்கு - செல்வம் இல்லாதவர்க்கு, நட்டார் இல் - நட்பினர் ஒருவரும்இலர்.

(க-து.) ஒருவன் செல்வமுடையனாய காலத்து அவனைச் சூழ்ந்து நிற்பதும், அஃதிலனாய காலத்துப் பிரிந்து நிற்பதும்கீழ்மக்களது இயற்கையாகும்.

(வி-ம்.) அட்டிற்று : வினையாலணையும் பெயர், 'அட்டிற்றுத் தின்பவர்' எனவே எல்லாப் பொருள்களு மிருக்கவும், அவற்றைச் சிறிது வருந்திச் சமைத்துண்ணவு மாட்டார்கள்; சமைத்த உணவை உண்ண வருவர்என்பதாம்.

'கெட்டார்க்கு நட்டாரோ இல்' என்பது பழமொழி.

(11)

15.நட்பில் விலக்கு

135. கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால்
எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும்
உண்ணுந் துணைக்காக்கும் கூற்று.