பக்கம் எண் :

91

(சொ-ள்.) கூற்று - இயமன், எண்ணி உயிர் கொள்வான் - ஆராய்ந்து உயிரை உண்ணும்பொருட்டு, வேண்டி திரியினும் - விரும்பித் திரிவானேயாயினும், உண்ணும் துணை காக்கும் - தான் உண்ணவேண்டிய காலம் வருமளவும் உயிரைப் பாதுகாத்து நிற்பான். (அதுபோல), கண்ணுள் மணியேபோல் - கண்ணினுள்ளேயிருக்கும் கருமணியைப்போல், காதலால் நட்டாரும் - தம் கருமத்தின்மேல் உள்ள ஆசையால் தம்மோடு நட்புச்செய்தவர்களும், எண்ணுந் துணையில் பிறர் ஆகி நிற்பர் - தமக்கு ஆக வேண்டிய கருமம் முடிந்தது என்று நினைத்த அளவில் முன்னர் இருந்தவராக அன்றி வேறொருவராக நிற்பர்.

(க-து.) கீழ்மக்கள் தாம் காரியம் முடியுமளவும் அதை முடிக்கவல்லாருடனிருந்து முடிந்தவுடன் விட்டுநீங்குவார்கள்.

(வி-ம்.) கூற்று, தான் தின்னுமளவும் உயிரைக் காத்தல்போல, கீழ்மக்களும் தம் காரியம் முடியுமளவு கண்ணினுள்ள கருமணியைப்போல் போற்றிப் பாதுகாப்பர். நட்டார் என்றே மொழியாது 'காதலால் நட்டார்' என்றமையால், அவர் நட்பு அவரது காரியத்தின் கண்ணதாயிற்று. அது முடியவேண்டுமென்ற ஆசையால் நட்புக்கொண்டாரேயன்றி வேறில்லையென்பது. 'பிறராகி' என்பதற்கு முன் தாம் வேறு அவர் வேறு என்ற வேறுபாடு இல்லாதார் போன்று ஒழுகியவர், பின்னர் அவ்வேறுபாடு தோன்ற நிற்பர் என்ற பொருள் கூறுதலுமாம். 'உண்ணுந்துணை' ஊழால் இத்துணைக்காலம் எனவரையறுக்கப்பட்ட காலம்.

'எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந்துணைக் காக்கும் கூற்று' என்பது பழமொழி.

(1)

136. எய்ப்புழி வைப்பாம்எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக் குதவலர் பைத்தொடீஇ
அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ
மச்சேற்றி ஏணி களைவு.

(சொ-ள்.) பைத்தொடீ - பசுமையான பொன் வளையலை உடையாய்!, எய்ப்புஉழி வைப்பாம் என - தளர்வு வந்த இடத்து வைத்த பெருநிதியை ஒப்ப உதவி செய்வர் எனக் கருதி, போற்றப்பட்டவர் - நம்மால் விரும்பி நட்புக்கொள்ளப்பட்டவர், உற்றுழி - நமக்கு ஓர் இடையூறு வந்துற்ற விடத்து, ஒன்றுக்கு உதவலர் - ஒரு சிறிதும் உதவிசெய்யாதவராகி, அச்சு இடைவிட்டு திரியின் - அச்சம் காரணமாக மறுத்தொழுகின், அது -