அச் செய்கை, மச்சு ஏற்றி ஏணி களைவு அன்றோ - ஒருவனை மச்சின்மீது ஏற்றி ஏணி நீக்குதலை யொக்கும் அல்லவா! (க-து.) தம்மையே அடைக்கலமாக நினைத்து அடைந்தவர் ஒரு தீதுற்றால் தமக்கு இறுதி பயப்பினும் அவர்க்கு முன்னின்று உதவுதல்வேண்டும். (வி-ம்.) இவரே நம்முடைய துன்பத்தை நீக்குவார் என்று வேறு சாதனங்களைத் தேடாது நம்பி இருத்தலின்,அவர்க்கு உதவி செய்தல் அறிவுடையோர் கடமையாகும். பைந்தொடி, பைத்தொடி என்றாயது வலித்தல் விகாரம், அச்சம், அச்சு என்று ஈறு குறைந்து நின்றது. 'மச்சேற்றி ஏணி களைவு' என்பது பழமொழி. (2) 137. பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத் தாக்கி அமருள் தலைப்பெய்யார் - போக்கி வழியராய் நட்டார்க்கு மாதவம்செய் வாரே கழிவிழாத் தோளேற்று வார். (சொ-ள்.) பாப்புக் கொடியாற்கு - பாம்புக் கொடியை உடைய துரியோதனனுக்கு, பால் மேனியான் போல - போர் ஏற்பட்டவுடன் அதற்குதவாது சென்ற பால்போன்ற உடம்பினையுடைய பலராமனைப் போல, வழியராய் நட்டார்க்கு - வழி வழியாகத் தம்மோடு நட்பினைச் செய்தார் பொருட்டு, தாக்கி(ய) அமருள் தலைப்பெய்யார் - மிகத் துன்புறுத்தும் போரின்கண் கலத்தலிலராய், போக்கி - அவர் உயிரைப் பகைவரால் போகச் செய்து, (பின்னர்) மா தவம் செய்வார் - இறந்தார் பொருட்டு நீத்தார் கடனைச் சிறப்பாகச் செய்பவர்கள், கழி விழா தோள் ஏற்றுவார் - கழிந்த விழாவினை உடைய ஊரில் தம் புதல்வற்கு விழாக்காட்டும்பொருட்டு அவரைத் தோள்மீது சுமப்பாரோடொப்பர். (க-து.) நட்டார் துன்புற்றபோது அவர்க்காவனசெய்யாது அவர் இறந்தபின் சிறப்புச் செய்தல்கீழ்மக்களது செய்கையாகும். (வி-ம்.) பாம்பு - பாப்பு; வலித்தல், கௌரவர்க்கும் பாண்டவர்க்கும் போர் நேரிட்டபொழுது கௌரவர்க்குச் சார்பாய் இருந்த பலராமன் துரியோதனனிடம் வெறுப்புக்கொண்டு அவற்கு உதவிசெய்ய வேண்டுமென்று நினையாது, விதுரனையும்
|