அழைத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை செய்யும்பொருட்டுச் சென்றான். இதுமுதலடியிற் குறிக்கப்படும் செய்தி. தவம் - இறந்தார்களுக்காக 12 ஆம் நாள் அல்லது 16 ஆம் நாட்களில் அவர் நன்னிலை யுறுக என்று கூறிச் செய்யும் சிறப்பு. விழாக் கழிந்த பின்பு சென்று காண்போன் அவ்விழாச்சிறப்பின் பயனை அடைதல் இல்லை. அதுபோல, உயிரோடிருக்கும்போது ஓர்உதவியும் செய்யாது இறந்தபின் செய்யும் சிறப்பால்பயனில்லை. 'கழிவிழாத் தோளேற்றுவார்' என்பது பழமொழி. (3) 138. இடையீ டுடையார் இவரவரோ டென்று தலையாயார் ஆராய்ந்தும் காணார் - கடையாயார் முன்னின்று கூறும் குறளை தெரிதலால் பின்இன்னா பேதையார் நட்பு. (சொ-ள்.) தலையாயார் - மேம்பட்ட குணங்களை உடையவர்கள், (தம் நட்டார்மீது சிலர் கோள் கூறின்) இவர் அவரோடு இடையீடு உடையார் என்று - கோள் கூறிய இவர்கள் நம் நட்டாரோடு மாறுபாடு உடையவர் என்று நினைத்து, ஆராய்ந்தும் காணார் - அவர் கூறியனவற்றை ஆராய்ச்சிசெய்து குற்றம் காண்பதிலர், கடையாயார் - கடைப்பட்ட குணங்களை உடைய கீழோர், முன்நின்று கூறும் குறளை தெரிதலால் - தம் நட்டார் மேல் பிறர் வந்து கூறும் கோள்களை ஆராய்ச்சி செய்து அவர் குற்றங்களைக் காண்டலின், பேதையார் நட்பு பின் இன்னா - அறிவிலாரோடு கொண்ட நட்பு பின்னர் இன்னாததாக முடியும். (க-து.) அறிவுடையோர் நட்டார் குற்றத்தைக் காணமாட்டார்கள், அறிவிலார் அவர் குற்றத்தை ஆராய்ந்து காண்பார்கள். (வி-ம்.) 'கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு' என்பதும் இது. கூறுவோர் தம் நட்டாரிடத்துள்ள மாறுபாட்டால் கூறுகின்றார் என்றறிவதல்லது அவரிடத்து அக்குற்றங்கள் உளவாக அறியார் அறிவுடையோர். 'பின் இன்னா' என்றமையால் கீழ்மக்களோடு கொண்ட நட்பு முதலில் மிக இனிமையாதல் பெறப்படும். கீழ்மக்களோடு தாம் கொண்ட நட்பினைத் தாம் விடினும் அவர்கள் விடாது நிற்றலால் 'இன்னா' என்றார். எனவே, அவரது நட்பினின்றும் நீங்குதலே இனிமை பயப்பதாம். அறிவிலார் நட்பு பின் இன்னா; எனவே, அறிவுடையோர் நட்பு முன் இன்னா; பின் இனிதுஎன்பதும் அறியப்படும். 'பின் இன்னா பேதையார் நட்பு' என்பது பழமொழி. (4)
|